ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும் – மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால்.
Posted On:
23 DEC 2021 5:38PM by PIB Chennai
பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் & ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து நடத்திய, ஐந்தாவது சித்தர் தினம் "தொற்று நோய்களுக்கான பரிகாரத்தில் சித்த மருத்துவத்தின் வலிமை” எனும் தேசிய மாநாடு, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆண்டு விழா மலரை வெளியிட்டுப் பேசிய மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், சித்த மருத்துவத்தின் தந்தையாக அகத்தியர் கருதப்படுகிறார் என்றார். நடப்பு 21-ம் நுாற்றாண்டில் மக்களின் நலன் காக்க, சித்த மருத்துவம் உதவியாக உள்ளது. கொவிட் காலகட்டத்தில், சித்த மருத்துவத்தின் பங்களிப்பு அளப்பரியது. சித்த மருத்துவர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது. பிரதமர் திரு.மோடியின் வழிகாட்டுதலின் படி, சித்த மருத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் சித்த மருத்துவத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதன்படி, சித்த மருத்துவத்தின் சந்தை மதிப்பு, 13 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சித்த மருத்துவ மேம்பாட்டுக்கு உதவும் தமிழக அரசுக்கு மத்தயி அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளின் உதவியுடன், நோயிலிருந்து மக்களை காக்கும் சித்த மருந்துகளை கண்டுபிடிப்பதற்காக, அதற்கான கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். என்றும் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கேட்டுக் கொண்டார். கொரோனா தொற்று பாதித்த நேயாளியின் ஆக்ஸிஜன் அளவு, 60 சதவீதம் வரை குறைந்தும், சித்த மருத்துவத்தின் உதவியால் காப்பாற்றியது இதற்கு சிறந்த உதராணம் என்றும் குறிப்பிட்டார்.
சித்த மருத்துவம், மனிதனின் வாழ்க்கை மற்றும் உடல் நலத்திற்குத் தேவையான ஒன்று. உணவு நமது அடிப்படை மருந்து. அதுவே நமது வாழ்க்கை முறை. தினமும் யோகா செய்யுங்கள். ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக, நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்டது யோகா. அத்தகைய பாரம்பரிய மருத்துவ முறையை மத்திய-மாநில அரசுகள் இணைந்து பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய ஆயுஷ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு முஞ்சபாரா மகேந்திர கலுபாய், பொது நலத் திட்டங்களில், சித்த மருத்துவத்தை பலப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. தமிழ் காலாசாரத்தின் ஆனிவேராக சித்த மருத்துவம் உள்ளது. நாட்டின் கலாசாரத்திலும் சித்த மருத்துவ முறை பிரதிபலிக்கிறது. வர்ம கலை உட்பட பல்வேறு தற்காப்பு கலைகள், சித்த மருத்தவ முறைகள் வழியாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தது எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிப் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், தமிழ் தொன்மையான மற்றும் பழமையான மொழி. தமிழகம் சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. 1970ல், அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி, சென்னையில் அண்ணா சித்த மருத்துவமனையை துவக்கி வைத்ததை சுட்டிக்காட்டினார். தற்போதைய முதலமைச்சர் திரு மு க ஸ்டாலினும், சித்த மருத்துவத்திற்கென தனி பல்கலைக்கழகம் துவங்கப்படும் என சட்டசபையில் அறிவித்ததையும் அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகம் துவங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், தமிழகத்தில் 1,079 ஆரம்ப சுகாதார நிலையங்களில், சித்த மருத்துப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. 2007ல் சிக்குன்குனியா காய்ச்சலுக்கு முதல் முதலாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கொவிட் கால கட்டத்தில், 3.84 கோடி ரூபாய் செலவில், 87 ஆயிரத்து 814 கிலோ கபசுர குடிநீர்; 12 கோடி ரூபாய் மதிப்பில், 1.74 லட்சம் நிலவேம்பு கசாயம்; 3.66 கோடி ரூபாய் மதிப்பில், 55 ஆயிரத்து 483 நோய் எதிர்ப்பு சக்தி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் துறை செயலாளர், திரு. வைத்ய ராஜேஷ் கொடேசா, சிறப்புச் செயலர் திரு.பிரமோத் குமார் பதக், திரு மனோஜ் நேசரி, ஆலோசகர் (ஆயுர்வேதம்), ஆயுஷ் அமைச்சகம், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குனர் கனகவல்லி, தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784608
-----
(Release ID: 1784636)
Visitor Counter : 6001