பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்.

அடுத்த பட்ஜெட்டிற்கு முன்னதாக தொழில்துறை பிரதிநிதிகளுடன் பிரதமர் உரையாடுவது இது இரண்டாவது முறை.
ஒலிம்பிக்கில் முன்னணியில் திகழ நாடு விரும்புவது போல், ஒவ்வொரு துறையிலும் உலகின் முதல் ஐந்து இடங்களில் நமது தொழில் நிறுவனங்களை பார்க்கவும் நாடு விரும்புகிறது: பிரதமர்
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க அரசு உறுதியாக உள்ளது: பிரதமர்
தனியார் துறை மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரதமருக்கு தொழில்துறை தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்; தற்சார்பு இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்கு லட்சியத்தை அடைய உறுதி மேற்கொண்டனர்

Posted On: 20 DEC 2021 8:49PM by PIB Chennai

பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். அடுத்த மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக தொழில்துறை பிரதிநிதிகளுடன் பிரதமர் இது போன்று உரையாடுவது இது இரண்டாவது முறையாகும்.

 

கொவிட்டுக்கு எதிரான போரின் போது வெளிப்பட்ட நாட்டின் உள்ளார்ந்த வலிமை குறித்து பிரதமர் பேசினார். தொழில்துறை தலைவர்களின் உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளுக்கு நன்றி தெரிவித்த அவர், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை போன்ற கொள்கைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தினார்.

 

ஒலிம்பிக்கில் முன்னணியில் திகழ நாடு விரும்புவது போல்ஒவ்வொரு துறையிலும் உலகின் முதல் ஐந்து இடங்களில் நமது தொழில் நிறுவனங்களைப் பார்க்கவும்  நாடு விரும்புகிறது, இதற்காக நாம் கூட்டாக உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார். விவசாயம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் பெரு நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்துவது குறித்து பேசினார்.

அரசின் கொள்கை நிலைத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உத்வேகத்தை அளிக்கும் முன்முயற்சிகளை எடுக்க அரசு உறுதியாக உள்ளது என்றார். இணக்கச் சுமையைக் குறைப்பதில் அரசின் கவனம் குறித்தும் அவர் பேசியதோடு, தேவையற்ற இணக்கங்கள் அகற்றப்பட வேண்டிய பகுதிகள் குறித்து ஆலோசனைகளைக் கோரினார்.

 

தொழில்துறை பிரதிநிதிகள் பிரதமரிடம் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். தனியார் துறை மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். அவரது தலைமையின் காரணமாகவும், சரியான நேரத்தில் அவரது தலையீடுகள் மற்றும் சிறப்பான சீர்திருத்தங்கள் மூலமும் நாட்டின் பொருளாதாரம் கொவிட்டுக்குப் பிறகு மீட்புப் பாதையில் முன்னேறி வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கு லட்சியத்திற்கு பங்களிப்பதில் அவர்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர், மேலும் பிரதமரின் கதிசக்தி, ஐபிசி போன்ற அரசின் பல நடவடிக்கைகளை அவர்கள் பாராட்டினர். நாட்டில் வணிகம் செய்வதை மேலும் எளிதாக்குவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். காப் 26 பருவநிலை மாநாட்டில் இந்தியாவின் உறுதிமொழிகள் குறித்தும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகளை அடைவதில் தொழில்துறை எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது பற்றியும் அவர்கள் பேசினர்.

 

சரியான நேரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை கொவிட்டுக்குப் பின்பு வி-வடிவ மீட்சிக்கு வழிவகுத்தது என்று திரு. டி வி. நரேந்திரன் கூறினார். உணவு பதப்படுத்தும் தொழிலை மேலும் மேம்படுத்த திரு. சஞ்சீவ் புரி ஆலோசனைகளை வழங்கினார். தூய்மை இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற எளிமையான ஆனால் அழகாக வெளிப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் பிரதமர் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என்று திரு. உதய் கோடக் கூறினார்.

 

பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கையை விரிவானதாக எவ்வாறு மாற்றுவது என்பது பற்றி திரு. சேஷகிரி ராவ் பேசினார். இந்தியாவை உற்பத்தித் துறையில் மாபெரும் நாடாக மாற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் திரு. கெனிச்சி அயுகாவா உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். காப் 26-ல் பிரதமரின் பஞ்சாமிர்த உறுதி பற்றி திரு. வினீத் மிட்டல் பேசினார்.

கிளாஸ்கோவில் பிரதமரின் தலைமைத்துவம் சர்வதேச சமுதாயத்தால் மிகவும் பாராட்டப்பட்டது என்று திரு. சுமந்த் சின்ஹா கூறினார். சுகாதாரத் துறையில் மனித வளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து திருமதி. ப்ரீத்தா ரெட்டி பேசினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி திரு.ரித்தேஷ் அகர்வால் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783632

 

*************


(Release ID: 1783992) Visitor Counter : 205