பாதுகாப்பு அமைச்சகம்

பிம்ஸ்டெக் நாடுகளுக்காக புனே யில் பேனக்ஸ்-21 மனிதாபிமான உதவி மற்றம் பேரிடர் நிவாரண பணி பயிற்சி: பாதுகாப்புத்துறை அமைச்சர் பார்வையிட்டார்

Posted On: 21 DEC 2021 2:11PM by PIB Chennai

பிம்ஸ்டெக் நாடுகளுக்காக புனே யில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட பேனக்ஸ்-21 மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பணி பயிற்சியைபாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட்டார். இயற்கை பேரிடர் ஏற்படும் போது இந்திய படைகள் மேற்கொள்ளும் துரித நிவாரண நடவடிக்கைகளின் செய்முறை விளக்கத்தையும் அவர் பார்வையிட்டார்.  இந்த ஒருங்கிணைந்த பயிற்சியில் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

பேரிடர் நிவாரண பணிகளில், இந்திய தொழில்துறையின் திறன்களை வெளிப்படுத்துவதற்காகராணுவ சாதனங்கள் குறித்த கண்காட்சியும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பணிகளை திட்டமிடுவது மற்றும் மேற்கொள்வதில்  புதுமையான தீர்வுகள், திறன்கள் மற்றும் உபகரணங்கள்  ஆகியவை பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு விளக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பல சாதனங்களின்  தொகுப்பை மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

 இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. ராஜ்நாத் சிங், தற்போது நிலவும் நாகரீக பிணைப்புகளை வலுப்படுத்துவதில்பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகள் மிக முக்கியமானவை என குறிப்பிட்டார். இயற்கை பேரிடர் சமயத்தில், இந்த நாடுகள் ஒன்றுக்கொன்று துணை நிற்பதை பாராட்டிய மத்திய அமைச்சர், பேனக்ஸ்-21 பயிற்சி, பேரிடர் நிவாரண பணிகளை எதிர்கொள்வதில் ஒருங்கிணைந்த செயல் முறைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது என குறிப்பிட்டார்.

இந்த பயிற்சி, எதிர்கால பேரிடர் சவால்களை சந்திக்க, மேம்பட்ட ஒருங்கிணைப்புக்கு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, ராணுவ உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேனக்ஸ்-21 பயிற்சி டிசம்பர் 22ம் தேதி வரை நடக்கிறது. 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783785

**************



(Release ID: 1783979) Visitor Counter : 300