குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
எழுத்தாளரின் சொற்கள் சமுதாயத்தில் அறிவுசார் விவாதத்தை ஏற்படுத்த வேண்டுமே அல்லாமல், தேவையற்ற சர்ச்சைகளை தூண்டுவதாக இருக்கக்கூடாது; குடியரசு துணைத்தலைவர்
Posted On:
18 DEC 2021 6:42PM by PIB Chennai
ஒருவரது கருத்து சுதந்திரம் பொறுப்புள்ளதாக இருக்க வேண்டும் என்றும், மற்றவர்களது நம்பிக்கையையோ அல்லது உணர்வுகளையோ புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். பொது வெளியில் பேசும்போது, வார்த்தைகள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள திரு நாயுடு, எழுத்தாளரின் சொற்கள் சமுதாயத்தில் அறிவுசார் விவாதத்தை ஏற்படுத்த வேண்டுமே அல்லாமல், தேவையற்ற சர்ச்சைகளை தூண்டுவதாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய ஞானபீடம், புதுதில்லி சாகித்ய அகாடமி அரங்கில் ஏற்பாடு செய்த 33-வது மூர்த்திதேவி விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், பிரபல இந்தி எழுத்தாளர் திரு விஸ்வநாத் பிரசாத் திவாரி எழுதிய ‘ ஆஸ்தி அவுர் பவதி’ என்ற நூலுக்கு விருதை வழங்கினார்.
எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் நாட்டின் அறிவுசார் தலைமை என்று கூறிய திரு நாயுடு, சொல்லும், மொழியும் மனித வரலாற்றின் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்புகள் என்றார். மிகவும் நாகரிகமான சமுதாயத்தில், அதன் மொழியும் அற்புதமானதாக இருக்கும். மிகவும் விழிப்புணர்வு கொண்ட சமுதாயத்தில், அதன் மொழி விரிவானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். நாட்டின் செழுமாயான இலக்கிய பன்முகத்தன்மையை பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், இந்தியாவின் வலிமை அதன் கலாச்சார ஒற்றுமையில் உள்ளது என்றார். ஒவ்வொரு இந்தியரும், மற்ற மொழிகளில் முக்கியமான சொற்களையோ, வாழ்த்துக்களையோ, சொற்றொடர்களையோ கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு இந்திய மொழியும் தேசிய மொழிதான் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், தேசிய ஊடகங்கள் அனைத்து இந்திய மொழிகளுக்கும், அவற்றின் இலக்கியங்களுக்கும் போதிய இடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்திய மொழிகளின் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சாகித்ய அகாடமி போன்ற நிறுவனங்களைப் பாராட்டிய திரு நாயுடு, இந்த விஷயத்தில் மேலும் முயற்சிகள் தேவையென்றும், நவீன தொழில்நுட்பங்களை இதற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் விரிவாக அறிந்து கொள்ள ஆங்கில செய்தி குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783065
****
(Release ID: 1783098)
Visitor Counter : 217