விண்வெளித்துறை
2021 – 23 காலத்தில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப 4 நாடுகளுடன் 6 ஒப்பந்தங்களில் இஸ்ரோ கையெழுத்து: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுதல் மூலம் 132 மில்லியன் யூரோ வருமானம் கிடைக்கும்: டாக்டர். ஜிதேந்திர சிங்
1999 ஆம் ஆண்டு முதல் 34 நாடுகளின் 342 செயற்கைக்கோள்கள் பி எஸ் எல் வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்.
Posted On:
16 DEC 2021 3:36PM by PIB Chennai
2021 – 2023 வரையிலான காலத்தில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப 4 நாடுகளுடன் 6 ஒப்பந்தங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கையெழுத்திட்டுள்ளது என மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுதல் மூலம் 132 மில்லியன் யூரோ வருமானம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார். மேலும், இந்திய விண்வெளி துறையின் கீழ் இயங்கும் இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என் எஸ் ஐ எல்) வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி எஸ் எல் வி ராக்கெட் மூலம் அனுப்பி வருகிறது, என்று கூறினார். மாணவர்கள் தயாரித்த 12 செயற்கைக்கோள்கள் உள்பட 124 உள்நாட்டு செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், மாநிலங்களவையில் இது தொடர்பான இன்னொரு எழுத்துப்பூர்வமான பதிலில், 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 34 நாடுகளின் 342 செயற்கைக்கோள்கள் பி எஸ் எல் வி ராக்கெட் மூலம் வணிக ரீதியில் ஏவப்பட்டுள்ளன என்றார்.
இந்திய ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம், 2019- 2021 வரையிலான இந்த 3 ஆண்டுகளில் இந்தியா அந்நிய செலாவணியாக 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோவை வருமானமாக பெற்றுள்ளது என்று கூறியுள்ள அமைச்சர், இவ்வகை வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் புவி கண்காணிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்காக இந்திய ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது, என்றார்.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவை சேர்ந்த 226 செயற்கைக்கோள்களும், இங்கிலாந்து, கனடாவை சேர்ந்த தலா 12 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
******
(Release ID: 1782322)
Visitor Counter : 249