குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வேளாண்மையை லாபகரமானதாகவும், நிலையானதாகவும் மற்றும் பருவநிலைகளை தாக்குப்பிடிப்பதாகவும் மாற்ற ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை : குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 08 DEC 2021 7:47PM by PIB Chennai

வேளாண்மையை லாபகரமானதாகவும், நிலையானதாகவும் மற்றும் பருவநிலைகளை தாக்குப்பிடிப்பதாகவும் மாற்ற ஒருங்கிணைந்த முயற்சிகள்  தேவை என  குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். 
தெலங்கானா வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் வி. பிரவீன் ராவுக்கு, எம்.எஸ்.ஸ்வாமிநாதன் விருதை குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வழங்கினார். இந்த விருதை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஓய்வு பெற்ற ஊழியர்கள்  மற்றும் நுசிவீடு விதைகள் நிறுவனம் ஆகியவை இணைந்து  நிறுவியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் திரு. வெங்கையா நாயுடு பேசியதாவது: 
துல்லியமான திட்டங்கள் மூலம், நாட்டில் விவசாய உற்பத்தியை பல்வகைப்படுத்த வேண்டும். உணவு தானியங்களின் உற்பத்தியை கடந்து , பருப்புகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 
சொட்டு நீர் பாசன முறை மூலம், விவசாயிகளுக்கு உதவிய டாக்டர் வி. பிரவீன் ராவின் பணி பாராட்டத்தக்கது. இந்தியாவில் விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பேராசிரியர் ஸ்வாமிநாதன். வேளாண் முறைகளுக்கு தனது சிறப்பான பங்களிப்பு மூலம் இந்தியாவை அவர்   பெருமையடையச்   செய்தார். 
இந்திய விவசாயம் வேகமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் உணவு தானிய பற்றாக்குறை பிரச்னை இருந்தது. தற்போது உணவு தானியங்கள் அபரிமிதமாக இருக்கும் பிரச்னையை நாடு சந்தித்துள்ளது. 
1950-51ம் ஆண்டில் உணவு தானியங்களின் உற்பத்தி 50.83 மில்லியன் டன்னாக இருந்தது. அது 2020-21-ல் 308.66 மில்லியன் டன்னாக உள்ளது. பால், முட்டை, பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்ளது. 
அதிகமாக கிடைக்கும் தானியங்களை விட, தேவையுள்ள வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு நிலையான வருவாயை உருவாக்க, பாரம்பரிய விவசாய முறைகளை கடந்து கால்நடை, தோட்டக்கலை, மீன்வளர்ப்பு, பட்டு வளர்ப்பு போன்ற துறைகளில் விவசாயிகளை ஈடுபடுத்தி, விவசாயத்தை பல்வகைப்படுத்த  வேண்டும். 
இவ்வாறு திரு. வெங்கையா நாயுடு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779455

                                                                       *************

 

 

 



(Release ID: 1779522) Visitor Counter : 170