ஜல்சக்தி அமைச்சகம்
ராஜஸ்தானுக்கு ரூ.1,816 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல்
Posted On:
30 NOV 2021 4:59PM by PIB Chennai
நவம்பர் 29-ந் தேதி நடந்த மாநில அளவிலான திட்ட அனுமதி குழுவில் ராஜஸ்தானுக்கு ரூ.1,816 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோக திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 2,348 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஊரகப்பகுதிகளில் உள்ள 3.8 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். நீர் மாசால் பாதிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களுக்கு தரமான குடிநீர் வழங்க முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊரகப்பகுதி குடிநீர் திட்டங்களுக்கு மாநில அளவிலான திட்ட அனுமதி குழுக்கள் அமைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.
கிராமப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கை உறுதி செய்யும் வகையில், ராஜஸ்தானுக்கு 2021-22- ஆண்டில் ரூ.10,180.50 கோடி மானியத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் அவல நிலையைப் போக்க மத்திய அரசு, மாநிலத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவதற்காக ரூ.2,522.03 கோடியை கடந்த ஆண்டு ஒதுக்கியது. இந்த ஆண்டு மத்திய அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் மத்திய ஒதுக்கீட்டை நான்கு மடங்காக அதிகரித்துள்ளார். 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்க முழு உதவி வழங்கப்படும் என மத்திய ஜல்சக்தி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
2019- ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்ட போது 3.23 கோடி (17%) குழாய் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. கடந்த 27 மாதங்களில் கொவிட் பெருந்தொற்று, ஊரடங்கு இடையூறுகளுக்கிடையிலும் ஜல்ஜீவன் இயக்கம் வேகமாக செயல்படுத்தப்பட்டு 5.35 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 8.59 கோடி (44.6%) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கோவா, தெலங்கானா. அரியானா மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, தாத்ரா நாகர்ஹவேலி, டையூ அண்ட் டாமன் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 83 மாவட்டங்களில் 1.25 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776487
*****
(Release ID: 1776598)