குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் கோவிந்த்

Posted On: 26 NOV 2021 1:55PM by PIB Chennai

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பவர்கள் என்று குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்திய நாடாளுமன்றக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் இன்று (நவம்பர் 26, 2021) அவர் உரையாற்றினார்.

 நமது நாடாளுமன்றம் இந்திய ஜனநாயக அமைப்பில் உச்சத்தில் உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். மேலும், அனைத்து எம்.பி.க்களும் இங்கு கூடி சட்டங்களை இயற்றுவதுடன் பொது நலன் தொடர்பான பிரச்சனைகளையும் விவாதிக்கின்றனர். உண்மையில், கிராம சபை, விதான சபை மற்றும் நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஒரே முன்னுரிமை இருக்க வேண்டும். அந்தத் தனியான முன்னுரிமை, அவர்களின் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் பணியாற்றுவதில் உள்ளது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மக்கள் சேவையின் உண்மையான நோக்கத்திற்கு இடையூறாக எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது என தெரிவித்தார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போட்டியிடுவது இயல்பானது - ஆனால் இந்தப் போட்டி சிறந்த பிரதிநிதிகளாகவும், பொது நலனுக்காக சிறந்த விஷயங்களைச் செய்வதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான போட்டியாக கருதப்படும். நாடாளுமன்றத்தில் போட்டி என்பதை அடிதடியாக மாறக்கூடாது. நமது நாடாளுமன்றத்தை ஒரு 'ஜனநாயகக் கோவில்' என்று நாம் அனைவரும் நம்புகிறோம். எனவே, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் எப்படி மரியாதையுடன் நடந்து கொள்கிறார்களோ, அதே உணர்வோடு இந்த ஜனநாயகக் கோவிலிலும் நடந்து கொள்வது அவர்களின் பொறுப்பாகும்.

குடியரசு தலைவர் தனது உரையில் உண்மையில் எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் மிக முக்கியமான அங்கம் என தெரிவித்தார். திறமையான எதிர்க்கட்சி இல்லாமல், ஜனநாயகம் செயலிழந்துவிடும். அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், குடிமக்களின் நலன்களுக்காக தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இதை முன்வைத்தே சட்டம் இயற்றியிருக்கிறார்கள். இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியம்.

குடியரசு தலைவர் மேலும் தனது உரையில், சுதந்திரப் போராட்ட லட்சியங்களின் நீட்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்பைக் கருதினால், அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் பாரம்பரியத்தை வலுப்படுத்துவதில் அவர்கள் தங்கள் கடமையை கவனத்தில் கொள்வார்கள் என்று தெரிவித்தார். நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் அமர்ந்திருந்த இடங்களில் தான் இன்று அவர்கள் அமர்ந்துள்ளனர் என்பதை அவர்கள் உணர்ந்தால், அவர்கள் தங்களின் ஆழமான வரலாற்றையும் கடமை உணர்வையும் இயல்பாகவே உணர்வார்கள்.

விவாதங்களின் டிஜிட்டல் பதிப்பு, அரசியலமைப்பின் கையெழுத்திடப்பட்ட பதிப்பு மற்றும் அரசியலமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு மற்றும் அரசியலமைப்பு ஜனநாயகம் குறித்த ஆன்லைன் வினாடி வினா வெளியீடு குறித்து பேசிய குடியரசு தலைவர், அரசியலமைப்பு பேரவை விவாதங்களில் மனிதனின் மகத்துவத்தைப் பற்றிய பார்வைகளைப் பெறுகிறோம் என்று கூறினார். சிந்தனையும் உணர்வும் தேசத்தைக் கட்டியெழுப்ப வழிவகை செய்யப்பட்டது. விவாதங்களின் டிஜிட்டல் பதிப்பு கிடைக்கப்பெற்றதன் மூலம், நம் நாட்டு மக்கள் மட்டுமல்ல, முழு உலகமும், குறிப்பாக இளைய தலைமுறையினர், நமது நாட்டின் மகத்துவம் மற்றும் திறனைப் பற்றி அறிந்து கொள்வதோடு, எதிர்காலத்திற்கான வழிகாட்டுதலையும் பெறுவார்கள். அரசியலமைப்பின் கையெழுத்துப் பதிப்பில், நமது வரலாறு மற்றும் புராணங்களில் உள்ள நமது கலை, கலாச்சாரம் மற்றும் இலட்சியங்களின் சிறந்த எடுத்துக்காட்டுகளை மக்கள் அறிந்து கொள்வார்கள். அரசியலமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் மூலம், குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் இதுவரை நமது அரசியலமைப்பின் முன்னேற்ற பயணம் பற்றிய அறிவைப் பெறுவார்கள். அரசியலமைப்பு ஜனநாயகம் என்ற தலைப்பில் ஆன்லைன் வினாடி வினா நடத்தும் முயற்சி, நமது குடிமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே அரசியலமைப்பு விழுமியங்களை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குடியரசு தலைவர் தனது உரையில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை சமீபத்தில் நாம் கடைபிடித்துள்ளோம் என்பதை சுட்டிகாட்டினார். நாம் இப்போது நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாடு முழுவதிலுமிருந்து தீவிரமாக மக்கள் பங்கேற்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம். சாதாரண குடிமக்கள் தங்கள் இதயபூர்வமாக உணர்ந்த அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தரும் ஆழ்ந்த மரியாதையின் மூலமாக அவர்களின் தியாகங்களால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது என்பது தெளிவாகிறது. இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை நினைவுகூறுவது நமது சுதந்திரப் போராளிகள் போராடிய விழுமியங்களை நினைவுபடுத்தும் சந்தர்ப்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய இந்த விழுமியங்கள் நமது அரசியலமைப்பின் முகவுரையில் பொதிந்துள்ளன. நமது அன்றாட வாழ்வில் அந்த மகத்தான தேசிய லட்சியங்களைப் பின்பற்ற அனைவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த லட்சியங்களைப் பின்பற்றுவதன் மூலம், உலக அரங்கில் நமது அந்தஸ்தை மேலும் உயர்த்துவோம் என்றும், எந்தச் சவாலையும் திறம்பட எதிர்கொள்ளத் தயாராக இருப்போம் என்றும் தனது உரையில் தெரிவித்தார்.

*****(Release ID: 1775331) Visitor Counter : 317