மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீனவப் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது: மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன்
Posted On:
21 NOV 2021 6:02PM by PIB Chennai
வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மீன்வளத் துறையில் ஏராளமாக உள்ளதாகவும் 2024-25-ம் ஆண்டுக்குள் ரூபாய் ஒரு லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை இத்துறை எட்டுவதற்கான அனைத்து ஆதரவையும் இந்திய அரசு வழங்கி வருவதாகவும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா கூறினார்.
புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற உலக மீன்வள தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநிலங்கள் ஒன்றுக்கொன்று ஊக்கம் பெற்று கடல்சார் துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்றார்.
விவசாயிகள் கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் உருவாக வேண்டும் என்று அவர் கூறினார். "கடல்சார் துறைக்கான அனைத்து ஆதரவையும் நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வழங்கி வருகிறார். விவசாய கடன் அட்டை மீனவர்களுக்காக ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வை பெரிய அளவில் உருவாக்குவதற்கான மாபெரும் பிரச்சாரம் ஒன்றை அரசு விரைவில் தொடங்கும்," என்று அவர் கூறினார்.
தேசிய அளவிலான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், மீன்வளத்துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி உருவாக்கியதாகவும் அப்போதிலிருந்து குறுகிய காலத்திற்குள் இத்துறை மேம்படுத்தப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய் எனும் இலக்கை நாடு தற்போது நிர்ணயித்துள்ளதாகவும் கூறினார்.
மத்சய சம்படா யோஜனா எனும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் இத்திட்டத்தின் வாயிலாக மீன்வளத் துறைக்கு ரூபாய் 20,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் எல் முருகன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடற்பாசி விவசாயத்தின் மீதும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மீனவ சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு அதிகாரமளித்து இத்துறையில் தொழில் முனைதலை ஊக்குவிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்," என்றார்.
முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றாக பாராதீப் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் இணை அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியின் போது பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
-----
(Release ID: 1773798)
Visitor Counter : 212