குடியரசுத் தலைவர் செயலகம்

ஹரியானா மாநிலம் பிவானியில் உள்ள மாதிரி கிராமமான சூயிக்கு குடியரசுத் தலைவர் வருகை

Posted On: 17 NOV 2021 4:34PM by PIB Chennai

ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்திற்கு இன்று (நவம்பர் 17, 2021) சென்ற குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பல்வேறு பொது வசதிகளை அங்கு திறந்து வைத்தார்.

ஹரியானா அரசின் ஸ்வா-பிரெரீத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் மகாதேவி பரமேஸ்வரிதாஸ் ஜிண்டால் அறக்கட்டளை மூலம் இந்த கிராமம் ‘மாதிரி கிராமம்’ ஆக உருவாக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சுய் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றுவதில் திரு எஸ் கே ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். நமது தாய்நாட்டின் மீதுள்ள பற்றுக்கும் நன்றிக்கும் சிறந்த உதாரணம் இது என்றார் அவர்.

இக்கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள பள்ளி, நூலகம், குடிநீர் மற்றும் இதர வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு, கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கிராமம் சார்ந்த நமது பொருளாதாரத்தில் கிராமிய வளர்ச்சியே தேசிய வளர்ச்சியின் அடிப்படையாகும் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார். ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்காக ஹரியானா அரசை அவர் பாராட்டினார்.

நாம் அனைவரும் நமது கிராமங்களின் வளர்ச்சிக்காக உழைத்தால், நமது நாடு வளர்ந்த நாடாக மாறும் என்றார். இதுபோன்ற உதாரணங்களிலிருந்து மற்றவர்களும் உத்வேகம் பெற்று கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்காற்ற முன்வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772617

**********



(Release ID: 1772728) Visitor Counter : 227