தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஏவிஜிசி-க்கான தேசிய உயர்சிறப்பு மையத்தை உருவாக்க அரசு பணியாற்றி வருகிறது: திரு அபூர்வ சந்திரா
ஏவிஜிசி எனப்படும் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறைக்கான தேசிய உயர்சிறப்பு மையத்தை உருவாக்க அரசு பணியாற்றி வருகிறது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலாளர் திரு அபூர்வ சந்திரா இன்று கூறினார்.
சிஐஐ பிக் பிக்சர் உச்சி மாநாட்டின் 10-வது பதிப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். பிரசார் பாரதியுடன் இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பால் நடத்தப்படும் இந்நிகழ்வு காணொலி வாயிலாக இன்று தொடங்கியது.
உள்ளடக்கம், படைப்புத்திறன் மற்றும் புதிய உயரங்களை எட்டுதல் என்பது உச்சி மாநாட்டின் மையக்கருவாகும். இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் டாக்டர் பி டி வகேலா பேசுகையில், டிஜிட்டல் ஊடகத்தின் சக்தி குறித்து குறிப்பிட்டதோடு, நாட்டில் உள்ள அனைவருக்கும் தொலைக்காட்சி சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு தொழில்துறையினரை கேட்டுக்கொண்டார்.
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய திரு அபூர்வ சந்திரா, இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை வெளிநாடுகளில் விரிவடைவது குறித்து பேசினார். பிராட்காஸ்ட் சேவா போர்ட்டலின் உருவாக்கம் ஒலிபரப்புத் துறைக்கு திறமையான மற்றும் வெளிப்படையான ஆளுகையை வழங்குவதோடு பல்வேறு பங்குதாரர்களுக்கு ஒற்றை சாளர வசதியை வழங்குகிறது என்று அவர் கூறினார்.
அனைத்து முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்பதோடு, 2022-ம் ஆண்டு முதல் அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவற்றின் சர்வதேச விழாக்களிலும் இந்தியா பங்கேற்கும் என்று கூறிய திரு சந்திரா, ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஏவிஜிசி துறையின் அதிகரித்து வரும் பங்களிப்பை ஒப்புக்கொண்டார்.
இலகுவான ஒழுங்குமுறையை அரசு விரும்புவதாகவும், வசதியளிப்பவராக இருக்க விரும்புவதாக திரு சந்திரா மேலும் கூறினார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தத் தொழில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது, விரைவில் 100 பில்லியன் டாலர்களை எட்டும் என்று அவர் கூறினார்.
இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையானது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக மாறி வருவதோடு, அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை அளித்து இந்தியப் பொருளாதாரத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி திரு ஷஷி சேகர் வேம்பட்டி பேசுகையில், கோப்பு காட்சிகளை நவீன பகிரக்கூடிய வடிவங்களாக மாற்றுவதன் மூலம் உள்ளடக்கம், படைப்பாற்றல் மற்றும் புதுமை ஆகியவற்றின் புதிய உயரங்களை பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனம் அடைவது பற்றி விரிவாக பேசினார். தொலைகாட்சி மற்றும் வானொலி உள்ளடக்கத்தை தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைப்பதே முன்னோக்கி செல்லும் வழி என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772576
*********
(Release ID: 1772721)
Visitor Counter : 205