குடியரசுத் தலைவர் செயலகம்

ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் 51-வது மாநாட்டை குடியரசுத் தலைவர் மாளிகை நடத்தியது

Posted On: 11 NOV 2021 9:00PM by PIB Chennai

ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளின் 51-வது மாநாட்டை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 11, 2021) தொடங்கிவைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், "நண்பர், தத்துவஞானி மற்றும் வழிகாட்டி"-யாக ஆளுநர்கள் மாநிலங்களில் விளங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்ட இந்த ஒரு நாள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவால் நெறிப்படுத்தப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமரால் குடியரசுத் தலைவரின் கருத்துகள் எதிரொலிக்கப்பட்டன. நாட்டின் அரசமைப்பு விழுமியங்கள் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் ஆளுநர்கள் ஆற்றும் முக்கிய பங்கை தங்கள் உரைகளில் அவர்கள் வலியுறுத்தினர். 

பெருந்தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஆளுநர்களின் மாநாடு நடைபெறுகிறது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசிய இலக்குகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஆளுநர்கள் மிக முக்கியப் பங்காற்றுவதாகவும், இந்த உறுதியை நிறைவேற்ற, முடிந்தவரை அதிக நேரத்தைத் தங்கள் மாநிலத்தில் செலவழித்து, மக்களுடன் தொடர்பைப் பேண வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் தமது உரையில் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைக் கண்காணித்து, மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணம் சரியான நோக்கத்திற்காக செலவிடப்படுவதை உறுதி செய்வதில் ஆளுநர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார். சிறப்பாக செயல்பட்டு பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மக்களின் நம்பிக்கையை ஆளுநர்கள் பெறவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பி, இதை சரி செய்யும் இயக்கத்தில் சேர அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர். 

விடுதலையின் அம்ரித் பற்றிய செய்திகளை மக்களிடையே எடுத்து செல்லுமாறும், மக்களின் பங்களிப்பை இதில் அதிகரிக்கக் கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற சமூக அமைப்புகளை பயன்படுத்துமாறும் ஆளுநர்களை குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

ஆளுநர்கள் மாநாடு ஒரு நல்ல தொடக்கமாகும் என்று கூறிய பிரதமர், நூற்றாண்டின் மிகக் கொடிய பெருந்தொற்றின் நிழலில் இது நடைபெறுவதாக குறிப்பிட்டார். ஆளுநர் பொறுப்பு என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு முக்கியமான இணைப்பு என்று அவர் சுட்டிக்காட்டினார். 

ஆளுநர் அலுவலகம் உயிர்ப்புடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

ஆளுநர்கள் மாநிலத்தின் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்சனைகளை அறிந்துகொள்வதோடு, அண்டை மாநில ஆளுநர்களுடன் தொடர்ந்து உரையாட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் அல்லது கடலோர மாநிலங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், எல்லையோரங்களில் அல்லது கடற்கரையோரம் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் நேரத்தை செலவிடுமாறு ஆளுநர்களைக் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், ஆளுநர்கள் தங்கள் மாநிலங்களில் பணிபுரியும் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து உரையாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நமோ செயலியை பற்றி குறிப்பிட்ட பிரதமர், நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தினமும் காலையில் நேர்மறையான செய்திகளை அது கொண்டு வருவாதாக கூறினார். 


**************(Release ID: 1771286) Visitor Counter : 188


Read this release in: English , Urdu , Hindi , Punjabi