பாதுகாப்பு அமைச்சகம்
கோவா கடல்சார் கூட்டம் - 2021 நிறைவு - கடல்சார் சிந்தனையை ஒழுங்குபடுத்துவதற்கு இந்திய கடற்படையின் முயற்சி
Posted On:
10 NOV 2021 4:19PM by PIB Chennai
மூன்றாவது கோவா கடல்சார் கூட்டம் - 2021 கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வெற்றிகரமாக நடந்தது. இது இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளான வங்கதேசம், கமொரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரீசியஸ், மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர் இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் கடற்படை தலைவர்கள் மற்றும் கடல்சார் அமைப்புகளின் தலைவர்களை ஒன்றாக இணைத்தது.
"கடல்சார் பாதுகாப்பு மற்றும் பெருகிவரும் புதுவகை அச்சுறுத்தல்கள்: இந்திய பெருங்கடல் நாடுகளின் கடற்படைகளின் துடிப்பான பங்களிப்பு குறித்த ஆய்வு" எனும் தலைப்பில் இந்தாண்டின் கூட்டம் நடைபெற்றது. இந்திய பெருங்கடல் பகுதியில், அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை செயலாளர் திரு அஜய் குமார், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆக்கப்பூர்வ செயல்பாடு மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார வளம் குறித்து பேசினார். கடல்சார் பாதுகாப்புக்கான பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஐஓஎன்எஸ், ஐஓஆர்ஏ, பிம்ஸ்டெக், கொழும்பு பாதுகாப்பு கூட்டம் போன்றவை ஆற்றிய ஆக்கப்பூர்வ செயல்பாடுகளின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். வெளியுறவுத்துறை செயலாளர் திரு ஹர்ஷ் வர்தன் ஷிரிங்ளா பேசுகையில், கடல் பொருளாதாரத்தில் கடல்சார் போக்குவரத்தின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தினார். பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றத்துக்கு, கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் இடையே உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பலவிதமான ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. இதில் நிபுணர்கள், முன்னாள் கடற்படை அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் ‘மேக் இன் இந்தியா’ பாதுகாப்பு மற்றும் கப்பல் நிறுவன காட்சி கூடத்தை கடற்படை தளபதி தொடங்கி வைத்தார். இதில் பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் கப்பல் நிறுவனங்கள் தங்களை திறமைகளை வெளிப்படுத்தின. இந்திய கடற்படையின் நீர்மூழ்கி மற்றும் மீட்பு வாகனத்தின் செயல் முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இவற்றை வெளிநாட்டு கடற்படை தலைவர்கள் பார்வையிட்டனர். இந்தியாவின் கப்பல் கட்டும் திறனை வெளிப்படுத்துவதற்காக, இந்த கூட்டத்துக்கு வந்தவர்கள் ஐஎன்எஸ் கொச்சி போர்கப்பலில் அழைத்து செல்லப்பட்டனர்.
எதிர்கால கூட்டங்களிலும், அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவா கடல்சார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770541
****
(Release ID: 1770726)