ஊரக வளர்ச்சி அமைச்சகம்

விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தூய்மையான பசுமை கிராமங்கள் வாரம் கொண்டாடப்பட்டது

Posted On: 09 NOV 2021 4:13PM by PIB Chennai

75 வாரங்களுக்கு கொண்டாடப்படும் விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், 29 அக்டோபர் முதல் 4, நவம்பர் 21 வரை  ஒரு வார காலத்திற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தூய்மையான, பசுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தூய்மையான, பசுமையான கிராம வாரத்தின் போது, கழிவுகளைக் கொட்டுவதற்கான இடம் அடையாளம் காணப்பட்டு குழி தோண்டப்பட்டதுடன், கழிவுப் பொருட்களை மறு பயன்பாடு செய்தல், எளிதில் மட்காத கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மூலம், மண்புழு உரம் / இலை, தழை, உரக்குழி மற்றும் கழிவுகளைப் பணமாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  

இந்த நடவடிக்கையில், நாடு முழுவதும் உள்ள கிராமவாசிகள் உற்சாகத்துடன் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. பெரும்பாலான கிராமப் பஞ்சாயத்துக்களில், பல்வேறு கூட்டங்கள், பயிலரங்குகள் மற்றும் கள செயல் விளக்கங்கள், இந்த ஒரு வாரகாலத்தில் நடத்தப்பட்டது. மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட 1,970 நிகழ்ச்சிகளில், கழிவுகளைப் பணமாக்குவதற்கான 2,597 முன்முயற்சிகள் முடிக்கப்பட்டதுடன், 8,887 உரக் குழிகள் தோண்டப்பட்டு, 2,262 குழிகளில் ஒரு வார காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால், கிராமப் பஞ்சாயத்துகளில் கிராமப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுபுகட்டி, ஊக்குவிப்பதுடன், கிராமப்புறங்களில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளும்,  மேற்கொள்ளப்பட்டன.

உரக்குழிகள் அமைத்தல், திடக்கழிவு  மேலாண்மை (மண்புழு / இழை, தழை உரக்குழி) மற்றும் எஸ்எல்டபிள்யூஎம் பணிகள் (வடிகால் வாய்க்கால், திரவ உயிரி உரம், மழைநீரை சேமிக்கும் குழிகள், பள்ளி & அங்கன்வாடி கழிவறைகள் அமைத்தல், கிராம வடிகால் மற்றும் குட்டைகள் அமைத்தல்) போன்ற அனுமதிக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள அமைச்சகம் முக்கியத்துவம் அளித்தது.

-----

 



(Release ID: 1770338) Visitor Counter : 215