பாதுகாப்பு அமைச்சகம்

‘இந்திய ராணுவத் தளவாட உற்பத்தித் திட்டங்கள் 2021’ குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 08 NOV 2021 5:22PM by PIB Chennai

ராணுவத் தளவாட உற்பத்தித் திட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு 2021 நவம்பர் 8 அன்று ஃபிக்கி-யுடன் இணைந்து இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருந்தது. 2016ல் உற்பத்தி நடைமுறையின் தொடக்கத்திற்குப் பின் நடத்தப்படும் 6வது கருத்தரங்கமாகும் இது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம் எம் நரவானே, அரசின் ‘தற்சார்பு இந்தியா’ முன்முயற்சி மற்றும் பாதுகாப்புத்துறையில் தற்சார்பை மேம்படுத்துவதை நோக்கிய சீர்திருத்தங்களின் விளைவுகள் பற்றி வலியுறுத்தினார். ராணுவத்தின் நவீனமய தேவைகளை உள்நாட்டிலேயே சந்திப்பதற்கான இந்தியத் தொழில்துறையின் திறனில் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். ராணுவத்திற்கான தளவாட உற்பத்தியில் இரண்டாம் கட்ட 36 திட்டங்கள் இதற்கு சான்றாக இருந்தன என்று கூறிய அவர், தொழில்துறையுடன் ராணுவம் தற்போது முன்னேறி வருகிறது என்றார்.

கடந்த ஓராண்டாக கொவிட் சவால்கள் இருந்தபோதும் இந்திய ராணுவம் அசாதாரண முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பது பற்றியும் ராணுவத் தலைமைத் தளபதி எடுத்துரைத்தார். இதன் விளைவாக 12 திட்ட அனுமதி ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பாதுகாப்புத் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் பங்கினை தளவாட உற்பத்தி திட்டங்கள் விரிவுபடுத்தி இருப்பதாகவும் 40 சதவீதத்திற்கும் அதிகமான திட்ட அனுமதி ஆர்டர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ராணுவத்தின் துணைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல்  சந்தானு தயாள், ஃபிக்கி-யின் பாதுகாப்பு மற்றும் விண்வெளிக் குழுவின் தலைவர் திரு எஸ் பி ஷுக்லா பாதுகாப்புத்துறை தளவட உற்பத்தி பிரிவின் கூடுதல் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த இணையவழி கருத்தரங்கின் போது இந்திய ராணுவம் 6 புதிய இரண்டாம் கட்ட திட்டங்களை வெளியிட்டது.

ராணுவத் தளவாட உற்பத்தி குறித்த முழு விவரங்கள் அடங்கிய கையேடும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770045

****


 



(Release ID: 1770083) Visitor Counter : 213


Read this release in: English , Urdu , Hindi