குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கொவிட்-19 பெருந்தொற்றையடுத்து நமது வாழ்க்கை முறையிலும் சிந்தனையிலும் முக்கியமான மறுமதிப்பீட்டுக்குக் குடியரசுத் துணைத்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்


நாளந்தா பல்கலைக்கழகத்தில் 6வது தர்ம தம்ம சர்வதேச கருத்தரங்கை குடியரசுத் துணைத்தலைவர் தொடங்கிவைத்தார்

Posted On: 07 NOV 2021 5:31PM by PIB Chennai

உலகில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட கொவிட்-19 பெருந்தொற்றையடுத்து நமது வாழ்க்கை முறையிலும் சிந்தனையிலும் முக்கியமான மறுமதிப்பீட்டுக்குக் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய உலகில் பதற்றத்தை குறைத்து மக்களின் வாழ்க்கையை சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான வழிகளை நாம் சிந்திக்கவேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

கொவிடுக்குப் பிந்தைய உலக ஒழுங்கைக் கட்டமைப்பதில் தர்ம தம்ம பாரம்பரியங்கள் குறித்த 6வது தர்ம தம்ம சர்வதேசக் கருத்தரங்கை நாளந்தாவில் அவர் தொடங்கிவைத்தார். கொவிடுக்குப் பிந்தைய உலக ஒழுங்கில் உருவாகிவரும் சவால்களுக்குத் தீர்வு காண இந்து மதத்தின் தர்மம், புத்த மதத்தின் தம்மம் ஆகியவற்றின் பாரம்பரியங்களுடன் மற்ற மதங்களின் கோட்பாடுகளும் ஒட்டுமொத்த மற்றும் உள்ளடக்கிய சிறப்புகளைக் கொண்டுள்ளன. இந்து சமயம் மற்றும் புத்த சமய போதனைகளை ஒருவர் படித்து, புரிந்துகொண்டு, நடைமுறைப்படுத்தினால் நிச்சயமாக அவரது உள் மனதிலும் வெளியுலகிலும் அமைதியான நிலையை அடைய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சக் கோட்பாடுகளான சமாதான சகவாழ்வு, ஒத்துழைப்பு, பரஸ்பர கவனிப்பு மற்றும் பகிர்தல், அஹிம்சை, நட்பு, கருணை, அமைதி, வாய்மை, நேர்மை, தன்னலமின்மை தியாகம் ஆகியவை தர்ம நியாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

தர்மம்- தம்மம் ஆகியவை வாய்மையும் அஹிம்சையும், அமைதியும் நல்லிணக்கமும்,  மனிதத்தன்மையும் ஆன்மீகத் தொடர்புகளும், சகோதரத்துவமும் சமாதான சகவாழ்வும் உள்ளிட்ட பன்முகத் தன்மையைக் கொண்டவையாகும். பன்னெடுங்காலமாக இந்தியத் துணைக்கண்டத்தில் மக்களுக்கு வழிகாட்டும் கருவிகளாக இவை உள்ளன என்று அவர் கூறினார். “பகவான் புத்தர் நமக்கு எளிய விஷயங்களை போதித்துள்ளார் – தர்மத்தைப் பின்பற்றுங்கள், மாண்புகளைக் கற்பியுங்கள், உங்களின் அகம்பாவத்தை விட்டுவிடுங்கள். எவரிடமிருந்தும் எல்லோரிடமிருந்தும் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஞானத்தின் சக்தி மூலம் இந்தியாவுடன் வெளியுலகத்தை இணைப்பதில் ஒரு பாலமாகவும் அடித்தளமாகவும் நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் செயல்படவேண்டும் என்று அவர் கூறினார். கற்றலுக்கான இந்த மகத்தான தொட்டில் கூட்டான ஒத்துழைப்பை உருவாக்கும் உணர்வில் ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி சார் அனுபவத்தை மாற்றுவதற்கு உதவவேண்டும் என்று அவர் கூறினார்.

பருவ நிலை மாற்றத்தின் அபாயகரமான விளைவுகள் குறித்தும் எச்சரித்த குடியரசுத் துணைத்தலைவர் நீடித்த மற்றும் நமது இயற்கைச் சூழலுடன் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையை கைக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் நமது பாரம்பரியமான, இயற்கையோடு இயைந்த நடைமுறைகளை மக்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். நமது வேர்களை நோக்கி நாம் செல்லவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கரியமிலவாயு இல்லாத, உலகின் மிகப்பெரிய வளாகத்தைக் கட்டமைக்க இருப்பதற்காக நாளந்தா பல்கலைக்கழகத்தை அவர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பீகார் ஆளுநர் பாகு சௌஹான், முதலமைச்சர் திரு நிதிஷ்குமார், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனைனா சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1769877

***



(Release ID: 1769888) Visitor Counter : 200


Read this release in: English , Urdu , Hindi , Punjabi