குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் வளர்ச்சியில் கிராமப் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்குண்டு: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 30 OCT 2021 6:25PM by PIB Chennai

நாட்டின் முன்னேற்றத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முக்கியப் பங்கை வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, விவசாயிகளின் நல்வாழ்வோடு பிரிக்கமுடியாத வகையில் அது இணைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பெருந்தொற்றின் போது மற்ற முன்கள வீரர்களுடன் தோளோடு தோள் நின்று, நாட்டில் சாதனை உணவு தானிய உற்பத்தியை உறுதி செய்ததற்காக விவசாயிகளைப் பாராட்டிய அவர், அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவை மறக்க முடியாதது என்றார்.

விஜயவாடாவில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையில் முப்பவரப்பு அறக்கட்டளை மற்றும் ரைத்து நேஸ்தம் இணைந்து நடத்திய விழாவில் வேளாண் துறையில் சிறப்பான பங்காற்றிய விவசாயிகள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசிய அவர், திறமையானவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும் என்றும் விருதுகளைப் பெறுபவர்கள் இன்னும் சிறப்பாக பணியாற்ற இது தூண்டுவதோடு மட்டுமின்றி மற்றவர்களையும் ஊக்குவிக்கிறது என்றார்.

 

விவசாயத்தை ஒரு ‘யாகம் என்று வர்ணித்த அவர், நவீன நடைமுறைகளைப் பின்பற்ற முயற்சிப்பதற்காகவும், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பதிலும் குறிப்பிடத்தக்க சாதனைக்காகவும் இந்திய விவசாயிகளை பாராட்டினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விவசாய சமூகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று திரு நாயுடு வலியுறுத்தினார். மரம் வளர்ப்பதற்கும், நீரைப் பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு விவசாயியும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அறிவியலும், தொழில்நுட்பமும் உலகின் முன்னேற்றத்தை உந்தித் தள்ளும் இவ்வேளையில், விவசாயம் பின்தங்கியிருக்க முடியாது, நவீன அறிவியல் நடைமுறைகளை வேளாண் துறை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர். விவசாயத்தை லாபகரமாக மாற்றுவது அரசின் பொறுப்பு மட்டும் அல்ல, நவீனமயமாக்கலின் பலன்களை விவசாயி அறுவடை செய்ய ஒவ்வொரு பங்குதாரரும் முன்வர வேண்டும் என்று திரு நாயுடு கூறினார். 

படித்த இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767938

********


(Release ID: 1767957) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Hindi , Punjabi