உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தின் நிலைமையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா வான்வழியாக ஆய்வு செய்தார்

Posted On: 21 OCT 2021 6:16PM by PIB Chennai

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தேவ்பிரயாக், ராம்நகர், ராம்கர், கவுலாப்பர் மற்றும் ருத்ராபூர் உள்ளிட்ட பகுதிகளை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா வான்வழியாக இன்று ஆய்வு செய்தார்.

உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங், முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு டி எஸ் ராவத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனில் பலுனி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வான்வழி ஆய்வுக்குப் பிறகு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் உரையாடினார்.

சரியான நேரத்தில் மத்திய அரசின் எச்சரிக்கைகள் உயிர் சேதத்தை குறைக்க உதவியது என்று திரு அமித் ஷா கூறினார். அக்டோபர் 16-ம் தேதி 24 மணி நேரத்திற்கு முன்னதாக மத்திய அரசு எச்சரிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரணப் படை, தேசிய பேரிடர் நிவாரணப் படை, இந்திய-திபெத் எல்லையோரப் படை, ராணுவம், விமானப்படைக்கு மாநில அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கைகள் அனுப்பியதால் பெரும் சேதத்தைத் தடுக்க முடிந்தது என்று அவர் கூறினார். அனைத்து கைபேசி நுகர்வோருக்கும் அவர்களின் மொபைல் போன்களில் முன்கூட்டியே எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன, இதனால் தேவையற்ற இயக்கங்கள் தவிர்க்கப்பட்டு மழை துவங்கும் முன் சார் தாம் யாத்ரீகர்கள் நிறுத்தப்பட்டனர், இதன் காரணமாக சார் தாம் யாத்ரீகர்கள் யாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை மற்றும் யாத்திரை இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் நிவாரணப் படை, ராணுவம், இந்திய-திபெத் எல்லையோரப் படை, பேரிடர் நிவாரணப் படை, மாநில குழுக்கள், தீயணைப்புப் படையினர் மழை தொடங்கும் முன் தயாராக நிறுத்தப்பட்டனர். ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் நிவாரணப் படை அணிதிரட்டல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடியும் அனைவருக்கும் தெரிவித்ததாக திரு அமித் ஷா கூறினார். மத்திய நீர் ஆணையத்திற்கும் நீர்ப்பாசனத் துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் நன்றாக இருந்தது, இதன் காரணமாக நீர் நிலைகளை நிர்வகிப்பது எளிதாக இருந்தது. மூன்று சாலைகளைத் தவிர, பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து இயக்கம் தொடங்கிவிட்டதாகவும், தேவையான இடங்களில் நிவாரணங்களும் வரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். நைனிடால், ஹல்ட்வானி மற்றும் அல்மோரா சாலைகளும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் ரயில் தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்துள்ளன மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 60 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, மக்கள் சுத்தமானக் குடிநீரைப் பெறத் தொடங்கியுள்ளனர் மற்றும் சுகாதார வசதிகள் பாதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் மற்றும் பதினாறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் முன்னெச்சரிக்கையாக தங்கவைக்கப்பட்டனர் என்று கூறிய அமைச்சர் இதுவரை சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த உயிர் சேதமும் இல்லை என்றார்.

தேசிய பேரிடர் நிவாரணப் படையின் 17 குழுக்கள், மாநில பேரிடர் நிவாரணப் படையின் 60 குழுக்கள், பிஏசி-யின் 15 குழுக்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் இன்னும் முழு நடவடிக்கையிலும் மக்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஓரிரு நாட்களில் நிலைமை இயல்பு நிலைக்கு வந்தவுடன், உள்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்புக் குழுக்கள் மாநிலத்திற்கு வந்து சேதத்தை மதிப்பீடு செய்து அதற்கேற்ப உதவி வழங்கப்படும் என்று திரு அமித் ஷா கூறினார்.

மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் மத்திய பங்காக ரூ 749.60 கோடியை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும், இந்த நெருக்கடியான நேரத்தில், இந்திய அரசு உங்களுடன் முழுமையாக உள்ளது என்று உத்தராகண்ட் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1765532

********


(Release ID: 1765569) Visitor Counter : 265


Read this release in: English , Urdu , Marathi , Hindi