கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஷிநகர் மகாபரிநிர்வாணா கோயிலில் அபிதாமா தின விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்


“புத்தரின் போதனைகள் ஒட்டு மொத்த உலகிற்கும் பொருந்தும், புத்தரின் தம்மா மனிதகுலத்திற்கானது”: பிரதமர்

"பகவான் புத்தரிடமிருந்து நாம் பெற்ற பொதுவான பாரம்பரியத்தை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், நம் நாடுகளிடையே வலுவான மற்றும் ஆழமான பிணைப்புகளை உருவாக்கவும் நாம் இன்று கூடியிருக்கிறோம்": திரு ஜி கிஷன் ரெட்டி

Posted On: 20 OCT 2021 3:49PM by PIB Chennai

குஷிநகர் மகாபரிநிர்வாணா கோயிலில் பவுத்த அபிதம்மா தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். சர்வதேச பவுத்தக் கூட்டமைப்பு மற்றும் உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து, மத்திய கலாச்சார அமைச்சகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், இலங்கை அமைச்சர் திரு நமல் ராஜபக்சே, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, கலாச்சாரம் இணை அமைச்சர்கள் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் திருமதி மீனாட்சி லேகி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கையைச் சேர்ந்த புத்தமதத் தூதுக்குழுவினர், மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பூடான், தென்கொரியா, இலங்கை, மங்கோலியா, ஜப்பான், சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அஸ்வின் மாத பவுர்ணமி புனித நாளில், புத்தபிரானின் புனித நூல் இங்கு கொண்டு வரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். இலங்கையிலிருந்து வந்துள்ள தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்புகளை நினைவு கூர்ந்ததுடன் அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வர் மகேந்திரனும், புதல்வி சங்கமித்திரையும் புத்தரின் போதனைகளை இலங்கையில் பரப்பியதையும் சுட்டிக்காட்டினார். இதே நாளில்தான் (அஸ்வின் பவுர்ணமி) இளவரசர் மகிந்தா இலங்கையிலிருந்து திரும்பி வந்து, அந்நாடு புத்தரின் போதனைகளை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டச் செய்தியை தமது தந்தையிடம் தெரிவித்ததாக நம்பப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் செய்தி, புத்தரின் போதனைகள் ஒட்டுமொத்த உலகிற்குமானது புத்த தம்மம் மனிதகுலத்திற்கானது  என்ற நம்பிக்கையை அதிகரித்ததாகவும் பிரதமர் கூறினார்.

புத்தபிரானின் போதனைகளை பரப்புவதில் சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர், சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் பொறுப்பு வகித்த திரு.சக்தி சின்ஹாவின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். திரு.சின்ஹா அண்மையில் காலமானார்.

இன்றைய தினம், புத்தபிரான் துஷித சொர்க்கத்திலிருந்து பூமிக்கு திரும்பிய மற்றொரு புனித நாள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். எனவே அஸ்வின் பவுர்ணமி தினமான இன்று புத்த துறவிகள் தங்களது 3 மாத கால மழைக்கால தங்குமிடத்திலிருந்து வெளியே வருகின்றனர். அத்தகைய துறவிகளுக்கு கடைசி விடியலைத் தந்த பெருமிதத்தை இன்று தாமும் பெற்றுள்ளதாக திரு மோடி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய இலங்கை அமைச்சர் திரு நமல் ராஜபக்சே, இலங்கையிலிருந்து குஷிநகருக்கு தொடங்கப்பட்ட முதல் விமானத்தில் பயணம் செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன் என்றும், இந்த மரியாதையை வாழ்நாள் முழுவதும் போற்றுவேன் என்றும் கூறினார். இலங்கைக்கு இந்தியாவிலிருந்து கிடைத்த மிகச் சிறந்த பரிசு புத்தமதம் என்றும் அவர் கூறினார்.

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தமது உரையில், குஷிநகர் இப்போது விமானம், ரயில் மற்றும் சாலை ஆகிய மூன்று முறைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது என்றும் புத்தரின் பிறப்பிடமான லும்பினிக்குச் செல்வது தற்போது எளிதாகி உள்ளது என்றும் கூறினார். பல வருடங்களின் கோரிக்கை கடைசியாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தமது உரையில், “இலங்கையின் வஸ்கடுவா கோவிலின் தலைமைத் துறவி, இந்தியாவிற்கு நினைவுச்சின்னங்களைக் கொண்டு வந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பகவான் புத்தரிடமிருந்து நாம் பெற்ற பொதுவான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், நம் நாடுகளிடையே வலுவான மற்றும் ஆழமான பிணைப்புகளை உருவாக்கவும் நாம் இன்று கூடியிருக்கிறோம்,” என்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பற்றிப் பேசிய அவர், “பெளத்த நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதை நமது பிரதமர் தமது தர்மமாக எடுத்துக்கொண்டார். குஷிநகர் சர்வதேச விமான நிலையம் புத்த மதத்தினரின் பயணத்தை எளிதாக்கும் மற்றொரு நடவடிக்கையாகும். உலகெங்கிலும் உள்ள துறவிகள் மற்றும் யாத்ரீகர்கள் புத்தருடன் தொடர்புடைய இந்த மதிப்புமிக்க இடத்தைப் பார்வையிட வருவார்கள்,” என்றார்.

21-ம் நூற்றாண்டில் தேசிய எல்லைகள், நம்பிக்கை அமைப்புகள், அரசியல் சித்தாந்தங்கள் உள்ளிட்டவற்றில் புரிதலையும் பொறுமையையும் ஊக்குவிக்க பகவான் புத்தர் பாலமாக விளங்கி நமக்கு ஞானத்தை வழங்குகிறார்,” என்று பிரதமர் முன்னர் கூறியதை அமைச்சர் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1765164

******


(Release ID: 1765220) Visitor Counter : 281


Read this release in: English , Urdu , Marathi , Hindi