மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
"ஆதார் ஹேக்கத்தான் 2021"-ஐ அக்டோபர் 28 முதல் 31 வரை உடாய் நடத்துகிறது
Posted On:
18 OCT 2021 5:45PM by PIB Chennai
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை விடுதலையின் அம்ரித் மகோத்சவமாக கொண்டாட பிரதமர் திரு நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார். தொழில்நுட்பத் துறையில் புதுமைகளைக் கொண்டாடும் மற்றும் சேவை விநியோகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும் ஆண்டு இது.
தான் வழங்கும் பல்வேறு சேவைகள் மற்றும் குடியிருப்பு அனுபவங்களை மேலும் மேம்படுத்தும் புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடன் அடுத்த தசாப்தத்தை நோக்கி உடாய் (இந்திய பிரதேயேக அடையாள ஆணையம்) முன்னேறிக் கொண்டிருப்பதால், இந்த ஆண்டும் ஆதாருக்கு முக்கியமானதாகிறது.
இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாடும் வகையில், "ஆதார் ஹேக்கத்தான் 2021" என்ற தலைப்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களை இலக்காகக் கொண்ட போட்டி ஒன்றை உடாய் நடத்துகிறது. பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் இவர்கள், உண்மையான உலகத்திற்குள் நுழைய ஆர்வமாக உள்ளனர். 2021 அக்டோபர் 28 அன்று நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கி 2021 அக்டோபர் 31 அன்று இரவு 11 மணி வரை ஹேக்கத்தான் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.
ஆதார் ஹேக்கத்தான் 2021 இரண்டு தலைப்புகளை மையமாகக் கொண்டது. "பதிவு மற்றும் புதுப்பித்தலை" மையமாகக் கொண்டு முதல் கருப் பொருள் அமைந்துள்ளது, முகவரியைப் புதுப்பிக்கும் போது குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் சில நிஜ வாழ்க்கையின் சவால்களை இது உள்ளடக்கியதாக இருக்கும்.
ஹேக்கத்தானின் இரண்டாவது கருப்பொருள் உடாய் வழங்கும் "அடையாளம் மற்றும் அங்கீகாரம்" தீர்வை மையமாகக் கொண்டுள்ளது. இந்த கருப்பொருளின் கீழ், ஆதார் எண் அல்லது அந்த தனிநபரின் இதர தனிப்பட்ட தகவலையும் பகிராமல் அடையாளத்தை நிரூபிக்க புதுமையான தீர்வுகளை உடாய் கோருகிறது. மேலும், உடாயின் புதிதாக தொடங்கப்பட்ட அங்கீகார முறையான - முக அடையாள அங்கீகார வசதியை சார்ந்த புதுமையான பயன்பாடுகளை இது தேடுகிறது. குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தற்போதுள்ள மற்றும் புதிய ஏபிஐ-களில் சிலவற்றை பிரபலப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் இந்த சவால்களை தீர்க்க, அனைத்து பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களையும் சென்றடைய உடாய் விரும்புகிறது. வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பிற கவர்ச்சிகர நன்மைகள் கிடைக்கும்.
இளைஞர்கள் குழுக்களாக இதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சி மற்றும் ஆன்லைன் பதிவு படிவத்தின் விவரங்கள் https://hackathon.uidai.gov.in/ இல் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764717
------
(Release ID: 1764768)
Visitor Counter : 323