பாதுகாப்பு அமைச்சகம்

ஆயுத தொழிற்சாலை வாரியத்திலிருந்து 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்களை உருவாக்கி விஜயதசமி நாளில் அர்ப்பணிப்பு

Posted On: 15 OCT 2021 2:10PM by PIB Chennai

ஆயுத தொழிற்சாலை வாரியத்திலிருந்து 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு  விஜயதசமி நாளில் இன்று நாட்டுக்கு  அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

டிஆர்டிஓ பவனில் கோத்தாரி ஆடிட்டோரியத்தில் இந்நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.

தன்னாட்சி செயல்பாடு, திறன் ஆகியவற்றை அதிகரித்து, புதிய வளர்ச்சி மற்றும் புத்தாக்க திறனை வெளிப்படுத்த ஆயுத தொழிற்சாலை வாரியத்தை ஒரு அரசு துறையிடம் இருந்து, 100 சதவீதம் அரசுக்கு சொந்தமான 7 பெருநிறுவனங்களாக மாற்ற அரசு முடிவு செய்தது. மியூனிசன்ஸ் இந்தியா லிமிடெட் (MIL), ஆர்மர்ட் வெயிக்கில்ஸ் நிகாம் லிமிடெட் (AVANI); அட்வான்ஸ்டு விபான்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் நிறுவனம் (AWE India); ட்ரூப் கம்போர்ட்ஸ் லிமிடெட் (TCL); யந்திரா இந்தியா நிறுவனம்  (YIL); இந்திய ஆப்டெல் நிறுவனம்  (IOL); மற்றும் கிளைடர்ஸ் இந்தியா நிறுவனம்  (GIL) என்ற பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள 7 புதிய நிறுவனங்கள் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் தங்கள் பணிகளை தொடங்கியுள்ளன.

 

பிரதமர் தனது உரையில், விஜயதசமி தினத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுக்கு பூஜை செய்வது வழக்கம் என குறிப்பிட்டார்.  இந்தியாவில், சக்தியை படைப்புக்கான  வழியாக பார்க்கிறோம். அதே உணர்வுடன் நாடு பலத்தை நோக்கி செல்வதாக பிரதமர் குறிப்பிட்டார். 

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கும் அவர் புகழாரம் சூட்டினார். வலுவான தேசத்துக்காக, டாக்டர் அப்துல் கலாம் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆயுத தொழிற்சாலைகளை மாற்றியமைப்பது மற்றும் 7 நிறுவனங்களை உருவாக்குவது வலுவான இந்தியாவை உருவாக்கும் கலாமின் கனவுக்கு பலம் அளிக்கும் என பிரதமர் கூறினார்.  புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள், இந்திய சுதந்திரத்தின் பொன்விழா காலத்தில், நாட்டின் புதிய எதிர்காலத்தை உருவாக்க பின்பற்றப்படும் பல தீர்மானங்களின் ஒரு பங்கு என அவர் கூறினார்.

இந்த நிறுவனங்களை உருவாக்கும் முடிவு நீண்ட காலமாக இருந்து வந்தது என பிரதமர் கூறினார். இந்த 7 புதிய நிறுவனங்கள்வரும் காலங்களில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வலுவான தளமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  இந்திய ஆயுத தொழிற்சாலைகளின் பெருமையான கடந்த காலத்தை குறிப்பிட்ட  பிரதமர், இந்த நிறுவனங்களை மேம்படுத்துவது சுதந்திரத்துக்கு பிந்தைய காலத்தில் புறக்கணிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக இந்தியா தனது தேவைகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வழிவகுத்தது என  கூறினார்.  ‘‘ இந்த சூழ்நிலையை மாற்ற, இந்த  7 பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும்’’ என பிரதமர் கூறினார். 

தற்சார்பு இந்தியா தொலைநோக்குக்கு ஏற்ப, இறக்குமதிக்கு மாற்றை ஏற்படுத்துவதில், இந்த புதிய நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும் என அவர் குறிப்பிட்டார்.  ரூ.65,000 கோடிக்கு  மேற்பட்ட ஆர்டர்கள், இந்த நிறுவனங்களின் மூலம்  நாட்டின் நம்பிக்கையை அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை அவர் நினைவு கூர்ந்தார். இவைகள் பாதுகாப்புத்துறையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை, வெளிப்படைதன்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறையை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். நாட்டின் பாதுகாப்பில் தற்போது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதாக அவர் மேலும் கூறினார்.  இந்த புதிய அணுகுமுறைக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு தளவாட வழித்தடங்களை அவர் உதாரணங்களாக எடுத்து கூறினார்.  சமீபத்திய ஆண்டுகளில் கொள்கை மாற்றங்களின் முடிவுகளை நாடு கண்டு வருவதால், நாட்டின் இளைஞர்களுக்கும் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என அவர் குறிப்பிட்டார். ‘‘கடந்த 5 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 325 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என அவர் குறிப்பிட்டார்.

  நமது நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் நிபுணத்துவத்தை மட்டும் ஏற்படுத்தாமல், உலகளாவிய பிராண்டாக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு என அவர் குறிப்பிட்டார். போட்டியான விலை நமது பலமாக இருக்கும்போது, தரம் மற்றும் நம்பகத்தன்மை நமது அடையாளமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 21ம் நூற்றாண்டில், எந்த ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பிராண்ட் மதிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.  ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் தங்களின் பணி கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என புதிய நிறுவனங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அப்போதுதான், அவர்கள் வெற்றிபெறுவதோடு மட்டும் அல்லாமல், எதிர்கால தொழில்நுட்பங்களில் முன்னணியில் செல்ல முடியும் என அவர் கூறினார். இந்த மாற்றம், புதிய நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சியை வழங்கி, புத்தாக்கத்தையும், நிபுணத்துவத்தை வளர்க்கும். இது போன்ற திறமைகளை புதிய நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார். தொடக்க நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவத்தை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவின் புதிய பயணத்தில் பங்கு பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த புதிய நிறுவனங்களுக்கு, மத்திய அரசு சிறந்த உற்பத்தி சூழலை மட்டும் அளிக்கவில்லை, சுயமான செயல்பாட்டை நிறைவு செய்துள்ளது என அவர் குறிப்பிட்டார். தொழிலாளர்களின் நலன் முழுமையாக பாதுகாக்க அரசு உறுதி அளித்துள்ளதாக அவர் வலியுறுத்தினார். 

ஆயுத தொழிற்சாலை வாரியத்தை மாற்றும் முடிவு குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எனவும், தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதில், அரசின் தீர்மானத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது’’ என்றார்.

ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் தற்போதைய முறையில் உள்ள பல குறைபாடுகளை போக்கவும்சந்தையில் போட்டியிடவும், ஏற்றுமதி உட்பட புதிய வாய்ப்புகளை ஆராயவும்   புதிய அமைப்பு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதோடு தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த மறுசீரமைப்பின் நோக்கம்ஆயுதத் தொழிற்சாலைகளை ஆக்கப்பூர்வமாகவும், லாபகரமானச் சொத்தாகவும்  மாற்றுவது; பொருட்கள் தயாரிப்பில் அதிக நிபுணத்துவத்தை ஏற்படுத்துவது; தரத்தை மேம்படுத்துவதுடன் போட்டியை அதிகரிப்பது மற்றும் செலவைக் குறைப்பதுபாதுகாப்பு தயார் நிலையில் தற்சார்பை உறுதி செய்வது என அவர் கூறினார். 

ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் அனைத்து ஊழியர்களும், புதிய பெருநிறுவனங்களுக்கு, 2 ஆண்டு கால சிறப்பு பணிக்கு  மாற்றம் செய்யப்படுவர் எனவும், மத்திய அரசு ஊழியர்கள் என்ற நிலையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் திரு. ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசி பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், பிரதமரின் தொலை நோக்கு மற்றும் தலைமையால் ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் மாற்றம் சாத்தியமானது என கூறினார். 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களில் உள்ள 41 தொழிற்சாலைகளில் பணியாற்றும் 75,000 ஊழியர்களை மாற்றம் செய்யும் மிகப் பெரிய சீர்திருத்தத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் மேற்கொண்டதற்காக பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களுக்கு, திரு அஜய் பட் நன்றி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவால், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர் சவுத்திரி, பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764148

*****************



(Release ID: 1764229) Visitor Counter : 416