குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஆசிரியர்களை கௌரவிப்பது இந்திய கலாச்சாரத்தின் பெருமைமிகு பாரம்பரியம்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 13 OCT 2021 6:41PM by PIB Chennai

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் அடித்தளப் பங்கின் முக்கியத்துவத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.

மேலும், இந்திய கலாச்சாரம் எப்போதும் குருக்களுக்கு மரியாதையையும் பக்தியையும் அளிக்கிறது என்று அவர் கூறினார்.

குடியரசு துணைத் தலைவரின் ஆசிரியர் திரு போளூரி ஹனுமஜ் ஜானகிராம சர்மாவின் நினைவாக நிறுவப்பட்டுள்ள விருதை திரு கோவெல சுப்ரசன்னாச்சார்யாவுக்கு கவிதை மற்றும் இலக்கியத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஹைதராபாத்தில் இன்று வழங்கிய திரு நாயுடு, திரு போளூரி ஹனுமஜ் ஜானகிராம சர்மா உள்ளிட்ட அவரது வழிகாட்டிகளுக்கு புகழாரம் சூட்டினார்.

தெலுங்கு இலக்கிய விமர்சனத்தில் ஒரு புதிய போக்கை அறிமுகப்படுத்தியதற்காகவும், சமூகத்தின் சில பிரிவுகளில் பாகுபாட்டிற்கு எதிராகப் போராடிய இந்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களை இணைத்துக்கொண்டதற்காகவும் விருதாளரை திரு நாயுடு பாராட்டினார்.

வழிகாட்டுதலுக்காகவும், தங்கள் வாழ்க்கையை வடிவமைப்பதில் உதவியதற்காகவும் ஒவ்வொருவரும் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் குருக்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் மற்றும் நன்றி செலுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

குடியரசு துணைத்தலைவரின் தனிப்பட்ட முயற்சியால் தெலங்கானா சரஸ்வதா பரிஷத்தால் நிறுவப்பட்ட இந்த விருது, தெலுங்கு மொழிக்கான பங்களிப்புகளை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

தெலுங்கு மொழியை பாதுகாப்பதற்காகவும், பரப்புவதற்காகவும் தெலங்கானா சரஸ்வதா பரிஷத்தை பாராட்டிய அவர், தொடக்கப்பள்ளி அல்லது உயர்நிலைப்பள்ளி வரை தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். அதுபோல, நிர்வாகம் மற்றும் நீதித்துறையிலும் உள்ளூர் மொழி பரவலாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

'அமிர்தோத்ஸவ பாரதி' மற்றும் 'ஸ்ரீ தேவுலப்பள்ளி ராமானுஜராவ்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் நிகழ்ச்சியின் போது அவர் வெளியிட்டார்.

தெலங்கானா சரஸ்வதா பரிஷத் தலைவர், ஆச்சார்யா எல்லூரி சிவரெட்டி, தெலங்கானா அரசு ஆலோசகர், டாக்டர் கே வி ரமணாச்சாரி, தெலங்கானா சரஸ்வதா பரிஷத் பொதுச் செயலாளர் திரு ஜெ சென்னய்யா, விருது பெற்ற ஆச்சார்யா கோவெல சுப்ரசன்னாச்சார்யா மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763678

*********



(Release ID: 1763711) Visitor Counter : 304