அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொலம்பியா துணை அதிபர் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரான திருமதி.மார்தா லூசியா ரமிரேஷ் டி ரின்கன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் உயிரி தொழில்நுட்பத்துறைக்கு வருகை
Posted On:
02 OCT 2021 12:39PM by PIB Chennai
கொலம்பியா துணை அதிபர் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரான திருமதி. மார்தா லூசியா ரமிரேஷ் டி ரின்கன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், புதுதில்லியில் உள்ள மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை அலுவலகத்திற்கு 01 அக்டோபர் 2021 அன்று வருகை தந்தனர்.
இவர்கள், உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் தலைமையிலான இந்தியக் குழுவினரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, உயிரி தொழில்நுட்பத் துறையில் இந்தியா மேற்கொண்டுள்ள பணிகளுக்கு கொலம்பியா துணை அதிபர் பாராட்டுத் தெரிவித்தார். சுகாதாரம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய இரு முன்னணி துறைகளில் பல்வேறு அம்சங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன் நீடித்த உயிரி தொழில்நுட்ப சூழலியலை உருவாக்குவதில் இந்தியா – கொலம்பியா இடையே அரசு – தனியார் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
கொலம்பியாவின் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை அமைச்சர் டாக்டர் பெர்னாண்டோ ரூயிஸ் கோமஸ் பேசுகையில், தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா உலகளவில் பிரசித்தி பெற்ற மையமாக உருவெடுத்துள்ளது என்றார்.
எனவே தடுப்பூசி தயாரிப்பு, பயோ சிமிலர்கள் மற்றும் மருத்துவ சாதன தயாரிப்புத் துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட கொலம்பியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் பேசுகையில், இந்தியாவும், கொலம்பியாவும் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவுடன் திகழ்வதாக கூறினார். அரசியல், வர்த்தகம், கலாச்சாரத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு, விண்வெளி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.
கொலம்பியா உயர்மட்டக் குழுவின் இந்தப் பயணத்தின் மூலம் இருதரப்பு அறிவியல் ஒத்துழைப்புகள் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றார். மேலும் இந்தியாவின் உயிரி பொருளாதாரத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் 150 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த இலக்கை எட்டுவதில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று நம்புவதாகவும் டாக்டர் ரேணு ஸ்வரூப் தெரிவித்தார்.
(Release ID: 1760332)
Visitor Counter : 235