மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

நாட்டில் உள்ள 122 நகரங்களில் 166 ஆதார் பதிவு மற்றும் திருத்த மையங்களை திறக்க தனித்துவ அடையாள அட்டை ஆணையம் திட்டமிட்டுள்ளது

Posted On: 02 OCT 2021 9:12AM by PIB Chennai

நாட்டில் உள்ள 122 நகரங்களில் 166 ஆதார் பதிவு மற்றும் திருத்த மையங்களை திறப்பது என்ற தனித்துவ அடையாள அட்டை ஆணைய திட்டத்தின் ஒரு பகுதியாக இதுவரை 55 ஆதார் சேவை மையங்களை (ASK) திறந்துள்ளது. வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மாநில அரசுகளால் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் 52,000 ஆதார் பதிவு மையங்களுக்கு கூடுதலாக இந்த மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த ஆதார் சேவை மையங்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருப்பதுடன், மாற்றுத் திறனாளிகள் உட்பட இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சேவையாற்றி உள்ளது.

இந்த மையங்களில், ஏ வகை மையத்தில் தினந்தோறும் 1000 பதிவுகள் மற்றும் திருத்தங்களையும், பி. வகையில் 500 பதிவுகளையும், சி. வகையில் 250 பதிவுகளையும் மேற்கொள்ளும் திறன் பெற்றுள்ளன. இந்த ஆதார் சேவை மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். பொது விடுமுறை தினங்களில் மட்டுமே இவை மூடப்பட்டிருக்கும். ஆதார் பதிவுகள் இலவசமாக மேற்கொள்ளப்படும் வேளையில், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கு குறைந்த கட்டணமாக ரூ.50-ம், முகவரி மாற்றம் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகளுக்கு ரூ.100-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் எண்.1, டென் ஸ்கொயர் மால், ஜவஹர்லால் நேரு சாலை, கோயம்பேடு, சென்னை என்ற முகவரியில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆதார் சேவை மையங்கள் ஆன்-லைன் முன்பதிவு அடிப்படையில் டோக்கன் வழங்கி, பொதுமக்களுக்கு ஆதார் பதிவு/ திருத்தங்களை மேற்கொள்வதில் தடையற்ற வகையில் சேவையாற்றி வருகின்றன. இந்த மையங்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருப்பதுடன், போதுமான இட வசதி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

•••



(Release ID: 1760267) Visitor Counter : 268