அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உலகளவில் போட்டி போடும் விதத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்களை ஆராய வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் வலியுறுத்தல்
Posted On:
26 SEP 2021 2:54PM by PIB Chennai
உலகளவில் போட்டி போடும் விதத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்களை ஆராய வேண்டும் என சிஎஸ்ஐஆர் மற்றும் அறிவியல் துறையினரிடம் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் வேண்டுகோள் விடுத்தார்.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில்(சிஎஸ்ஐஆர்) அமைப்பின் 80வது நிறுவன தின கொண்டாட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகள் எதிர்காலத்தை நோக்கி திரும்ப வேண்டும் என அறிவுறுத்தினார். நீண்ட கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் தேவைப்படும் சவால்களை சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் மற்றும் கழகங்கள் எதிர்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
வேளாண் ஆராய்ச்சியிலும், சிஎஸ்ஐஆர் தீவிர கவனம் செலுத்தி, புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என திரு வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார். பருவநிலை மாற்றம், தடுப்பு மருந்துகள், மாசு, தொற்று மற்றும் பெருந்தொற்று பரவல் போன்றவற்றின் மீது விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசுகையில், ‘‘ சிஎஸ்ஐஆர் மற்றும் அனைத்து அறிவியல் துறைகளும், உலகளவில் போட்டி போடும் விதத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்கள் குறித்து ஆராய வேண்டும்’’ என கூறினார்.
இந்தியாவில் சிறந்தது என்ற அளவுக்கு நமது இலக்கை கட்டுப்படுத்தாமல், உலகில் சிறந்தது என்பதாக நமது இலக்கு இருக்க வேண்டும் எனவும், சரியான பயிற்சி மற்றும் உந்துதலுடன், நமது இளைஞர்களால் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758257
(Release ID: 1758375)
Visitor Counter : 207