நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய பொருளாதாரத்தின் மாறிவரும் தேவைகளை எதிர்கொள்வதற்கு பாரத ஸ்டேட் வங்கியைப் போன்று 4-5 வங்கிகள் இந்தியாவிற்குத் தேவை: மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்

Posted On: 26 SEP 2021 2:05PM by PIB Chennai

பாரத ஸ்டேட் வங்கியை போல மேலும் 4 அல்லது 5 வங்கிகள் இந்தியாவிற்குத் தேவை என்று மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாறிவரும் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையின் தேவைகளை எதிர்கொள்வதற்கு வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். “பொருளாதாரம் முற்றிலும் மாறுபட்ட நிலையை நோக்கி நகரும்  விதம், தொழில்துறையை மாற்றி அமைக்கும் விதம் ஆகியவற்றால் பல புதிய சவால்கள் எழுகின்றன. இவற்றை எதிர்கொள்வதற்கு கூடுதல் வங்கிகள் மட்டுமே போதாது, மிகப்பெரிய வங்கிகளும் தேவை”, என்று அவர் வலியுறுத்தினார். மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய வங்கிகள் சங்கத்தின் 64-வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்துகையில் வங்கி துறையினரிடம் தமது கருத்துக்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

எதிர்காலத்தில் இந்திய வங்கிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை கற்பனை செய்யுமாறு தொழில்துறையினரை அவர் கேட்டுக்கொண்டார். “கொவிட் தொற்றுக்குப் பிந்தைய நிலவரத்தை நாம் பார்த்தோமேயானால், இந்தியாவில் வங்கிகளின் நிலை சற்று வித்தியாசமானதாக, பிரத்தியேகமானதாக இருக்கும். அதில் மின்னணுமயமாக்கல் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளால் பெருந்தொற்றின் போது தங்களது வாடிக்கையாளர்களை முறையாக சென்றடைய முடியாத நிலையில், நேரடி பண பரிமாற்ற முறை மற்றும் மின்னணு முறைகளின் வாயிலாக சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வங்கி கணக்குகளின் உரிமைதாரர்களுக்கு நாம்  பணத்தை பரிமாற்றம் செய்ய இந்திய வங்கிகளின் மின்னணுமயமாக்கல் உதவிகரமாக இருந்தது.”

மின்னணுமயமாக்கலின் பயன்கள் இருந்தபோதும், வங்கி சேவைகளை அணுகுவதில் ஏற்றத்தாழ்வுகள் அதிகளவில் இருந்து வருவதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டின் சில பகுதிகளில் நேரடி வங்கி சேவைகள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். மின்னணு தொழில்நுட்பங்களை முழுவதும் பயன்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கியின் அணுகலை மேம்படுத்துமாறு இந்திய வங்கிகள் சங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் கராட், கொவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு அரசு அறிவித்த தற்சார்பு இந்தியா தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிதி ஊக்குவிப்பு தொகுப்புகளின் பயன்களை பெருவாரியான மக்களிடம் கொண்டு சென்றதற்காக வங்கிகளை பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758243(Release ID: 1758368) Visitor Counter : 131