குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையை வேகமாக பூர்த்தி செய்ய குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
Posted On:
25 SEP 2021 2:00PM by PIB Chennai
சுகாதாரத் துறையில் பயிற்சி பெற்ற மனித வளப் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். 1:1,000 என்ற உலக சுகாதார அமைப்பின் விதிமுறையை விட குறைவாக இந்தியாவில் 1: 1,511 என்ற ரீதியில் உள்ள மருத்துவர் மற்றும் மக்கள்தொகை விகிதத்தைக் குறிப்பிட்டு, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப மேலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் துணை மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையைப் பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, செவிலியர் எண்ணிக்கையை (உலக சுகாதார அமைப்பின் விதிமுறை 1: 670, இந்தியாவில் 1: 300) துரித கதியில் உயர்த்த வேண்டும் என்றார். கிராமப்புறங்களில் நிலவும் பயிற்சியளிக்கப்பட்ட மனிதவள பற்றாக்குறை குறித்து பேசிய அவர், கிராமங்களில் பணியாற்ற சுகாதாரப் பணியாளர்களை ஈர்ப்பதற்காக சிறந்த ஊக்கத்தொகை மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்க பரிந்துரைத்தார்.
புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர், சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு சுகாதார குறியீடுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதை குறிப்பிட்டார். அதே நேரத்தில், அரசு மற்றும் தனியார் துறைகளின் ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான அணுகுமுறை தேவைப்படும் பல சவால்கள் உள்ளன என்று அவர் கூறினார்.
'அனைவருக்கும் ஆரோக்கியம்' என்ற இலக்கை அடைவதற்கான முதல் படி சுகாதாரத்திற்கான பொது செலவினங்களை அதிகரிப்பதாகும் என்று திரு நாயுடு வலியுறுத்தினார். 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை குறிப்பிட்ட அவர், 2022-க்குள் மாநிலங்களின் சுகாதாரத்திற்கான செலவை அவற்றின் வரவு செலவுத் திட்டத்தில் 8 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநிலங்களின் பொது சுகாதார செலவினங்களை 2025-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை அடைய செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.
அதிநவீன மருத்துவமனைகளை தனியார் துறையினரின் பங்களிப்புடன் கிராமப்புறங்களில் அமைக்க அவர் அழைப்பு விடுத்தார். மருத்துவ ஆலோசனை சாதாரண மக்கள் அணுகக்கூடியதாகவும் குறைந்த செலவிலும் இருக்க வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார்.
15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையைப் பற்றி குறிப்பிடுகையில், கூட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ 13,000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கூடுதலாக 15 லட்சம் பணியாளர்கள் உருவாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார் .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758000
*****************
(Release ID: 1758108)
Visitor Counter : 298