சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

லாரி ஓட்டுநர்களுக்குப் பணி நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்

Posted On: 21 SEP 2021 6:09PM by PIB Chennai

ஓட்டுநர்களின் சோர்வு தான் சாலை விபத்துக்களுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே சோர்வைக்  குறைக்க, லாரி டிரைவர்களுக்கும், விமான ஓட்டிகளைப் போலவே, வாகன ஓட்டும் நேரத்தைத் தீர்மானிக்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

தேசிய சாலைப் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம், இன்று நடந்தது. இதில் அதிகாரிகள், அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். இதில் ஐரோப்பிய நாடுகளின்  தரத்துக்கு இணையாக, வர்த்தக வாகனங்களில், ஓட்டுநர்களின் தூக்கக் கலக்கத்தைக் கண்டறியும் கருவிகளைப் பொருத்துவதற்கான கொள்கையை உருவாக்கும் படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தங்களின் அண்மைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை கூட்டவும் அமைச்சர் உத்தரவிட்டார். மாவட்ட  அளவிலான சாலைக்குழுக்கள் கூட்டம் தவறாமல் நடப்பதை உறுதி செய்வதற்காக,  மாநில முதல்வர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதவுள்ளதாக திரு.நிதின் கட்கரி கூறினார்.

புதிய தேசிய சாலைப் பாதுகாப்புக் குழுவை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த ஜூலை 28ஆம் தேதி அமைத்தது.  இதில் அதிகாரிகள் அல்லாத தனிநபர்கள் கலந்து கொண்டனர்.  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் ஜெனரல். வி.கே.சிங் இந்தக் கூட்டத்தில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த உறுப்பினர்கள்  முக்கியமான பல ஆலோசனைகளை வழங்கினர்.

சாலைப் பாதுகாப்பின் பல துறைகளில் உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும், அப்போது தான் சாலைகளில் பலரது உயிரைக் காப்பாற்ற முடியும் என அனைத்து உறுப்பினர்களுக்கும் அமைச்சர்  அறிவுறுத்தினார். தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். தேசிய சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவர்களின் ஆலோசனைகளை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு திரு. நிதின் கட்கரி உத்தரவிட்டார்.  சாலைப் பாதுகாப்பில் செய்யப்பட்ட சாதனைகள், மாத இதழ் மூலம் வெளியிடப்படவுள்ளன.

-----(Release ID: 1756839) Visitor Counter : 68