குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பெண்கள் வளர்ந்து அவர்களின் முழு திறனை அடைய பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழலை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் அறைகூவல்
சாதி, மதம், பிராந்தியம், மொழி மற்றும் பாலினம் அடிப்படையிலான அனைத்து சமூக பாகுபாடுகளையும் களைய வேண்டும்- குடியரசு துணைத் தலைவர்
தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தங்களை அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள்
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நூற்றாண்டு நினைவு விழாவில் திரு நாயுடு உரையாற்றினார்
பாரதியாருக்கு புகழஞ்சலி செலுத்திய குடியரசு துணைத்தலைவர், அவரது பாடல்கள் மக்கள் மத்தியில் தேசிய உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை ஏற்படுத்தியது என்றார்
Posted On:
18 SEP 2021 7:18PM by PIB Chennai
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டு வர இன்று அழைப்பு விடுத்த குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, அவர்கள் வளர மற்றும் அவர்களின் முழு திறனை அடைய பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழலை உருவாக்க அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற இல்லத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்திய கலாச்சாரம் எப்போதும் பெண்களை தெய்வீகத்தின் உருவமாக மதிக்கிறது என்பதை வலியுறுத்தினார்.
சமத்துவத்திற்கான பாரதியாரின் பார்வையை மேற்கோள் காட்டி, சாதி, மதம், பிராந்தியம், மொழி மற்றும் பாலின அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தும் அனைத்து தடைகளையும் பாகுபாடுகளையும் களைய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடும் போது புரட்சிகர கவிஞர் 11 வருடங்களுக்கும் மேலாக புதுச்சேரியில் தங்கியிருந்த வீட்டிற்கு தாம் சமீபத்தில் சென்றதை நினைவு கூர்ந்த திரு நாயுடு, இந்த சிறந்த கவிஞரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறுமாறு இளைய தலைமுறையினரை வலியுறுத்தினார்.
மகாகவி பாரதியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, 'சிறந்த காலங்கள் வரவிருக்கின்றன!' என்று கூறிய அவர், நாட்டை கட்டமைப்பதிலும், ஏழ்மை, கல்லாமை, பசி மற்றும் பாகுபாடு இல்லாத வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதிலும் தங்களை அர்ப்பணித்து கொள்ளுமாறு இளைஞர்களை கேட்டுக்கொண்டார். "நமது இளைஞர்கள், அவர்களின் அதீத ஆற்றல் மற்றும் உற்சாகத்தால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் விரைவான வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகளில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி கவிஞர், பத்திரிகையாளர், விடுதலை போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டவராக திகழ்ந்து, ஏழைகள் மற்றும் பின்தங்கியோரை ஆழ்ந்து நேசித்தார் என்று திரு நாயுடு கூறினார். “
அவரது உணர்ச்சிமிகு கவிதைகள் மற்றும் எழுத்துகள் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டுவதில் முக்கிய பங்காற்றின,” என்று அவர் கூறினார்.
சரளமாக கவிதைகளை இயற்றுவதில் அவரது அசாதாரண திறமைக்காக தேசிய கவிஞரை பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், எட்டயபுரம் தர்பாரில் தனது பதினொரு வயதில் 'பாரதி' என்ற பட்டத்தை பெற்றது ஒரு அரிய சாதனை என்று கூறினார். அவரது புதிய வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகள், எளிமையான வார்த்தைகள், வட்டார மொழிகள் மற்றும் பாடல்கள் மூலம், மகாகவி பாரதியின் கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கின என்றார் அவர்.
பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய், திரு வ உ சிதம்பரம் பிள்ளை மற்றும் ஸ்ரீ அரவிந்தர் போன்ற தேசியத் தலைவர்களுடன் பாரதியின் நெருங்கிய தொடர்பை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர், காலனித்துவ ஆட்சியின் இருண்ட நாட்களில், நமது நாட்டை சூழ்ந்திருந்த இருளை தேசியவாதம் மூலம் அகற்ற தனது சக்திவாய்ந்த வரிகளுடன் சூரியனைப் போல மகாகவி எழுந்தார் என்று கூறினார்.
சகோதரி நிவேதிதாவுடனான கவிஞரின் சந்திப்பைப் பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, இந்த சந்திப்பிற்கு பின்னர் பெண்கள் சுதந்திரம் மற்றும் அதிகாரமளித்தல் குறித்து இன்னும் அதிகளவில் பாரதியார் குரல் கொடுக்க தொடங்கினார் என்று கூறினார். "சக்கரவர்த்தினி இதழின் ஆசிரியரான பாரதி, பெண்களை மேம்படுத்துவது சக்கரவர்த்தினியின் குறிக்கோள் என்று அறிவித்தார்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
பாரதியின் எளிமை மற்றும் நேர்கொண்ட கருத்துகளை பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், அவரது பாடல்கள் சாதாரண மக்களின் இதயங்களையும் மனதையும் தொட்டு தேசியம் மற்றும் தேசபக்தியை நிரப்பியது என்று கூறினார்.
மகாகவி பாரதி தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், இந்தி, இந்துஸ்தானி மற்றும் தெலுங்கு உட்பட பல மொழிகளை நன்கு அறிந்தவர் என்று கூறிய திரு நாயுடு, தமது கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் சுதந்திர இந்தியாவுக்கான தேவையை ஆதரித்து, பத்திரிகையாளராக அயராது வாழ்ந்ததாக கூறினார். மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் புதிதான எதையும் ஆதரிக்கும் திறந்த மனம் கொண்டவர் பாரதி என்று அவர் கூறினார்.
பாரதி போன்ற மாபெரும் ஆளுமைகளின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவுகூருவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், எதிர்கால தலைமுறையினருக்கு அவரின் கருத்துக்களையும் சிறப்புகளையும் எடுத்து செல்வது முக்கியம் என்று கூறினார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு எட்டயபுரம் ஜமீன்தாரிடம் பாரதியார் கோரிய 'பல்லக்கு, தங்க சால்வை, பொற்கிழி மற்றும் பரிவாரங்களுடன்' ஒவ்வொரு ஆண்டும் பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் வானவில் கலாச்சார மையத்தை அவர் பாராட்டினார்.
"மாபெரும் கவிஞரின் சிறப்புகளை நினைவுகூரும் ஒரு அற்புதமான வழி இதுவாகும்" என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். நாட்டு மக்களிடையே தேசியம், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை ஊக்குவிக்க அழைப்பு விடுத்தார்.
பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை உரிய முறையில் கொண்டாடுவதற்கு மத்திய கலாச்சார அமைச்சகம், இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் மற்றும் தில்லி தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் முயற்சிகளை குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார்.
*****************
(Release ID: 1756109)
Visitor Counter : 846