சுரங்கங்கள் அமைச்சகம்

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு

Posted On: 15 SEP 2021 4:35PM by PIB Chennai

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மேற்கு மண்டலத்தில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த  கிருஷ்ணகுமார், பிரக்யா பாண்டே, த்ரிபர்னா கோஷ், டெபாசிட் பட்டாச்சாரியா ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதனைக் கண்டறிந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மர் பகுதியிலிருந்து ஜுராசிக் பாறாங்கற்களில் (ஏறத்தாழ 160-168 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த) முதன்முறையாக ஹைபோடோன்ட் வகை சுறா மீன் கண்டறியப்பட்டிருப்பதாக மூத்த புவியியல் ஆய்வு அதிகாரி திரு கிருஷ்ண குமார் கூறினார். தற்போது அழிந்திருக்கும் இந்த வகை சுறா மீன்கள், ஜுராசிக் மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் கடல் மற்றும் நதிகளில் பெரும்பாலும் காணப்பட்ட மீன் வகை ஆகும்.

எனினும் ஜுராசிக் காலத்தின் மத்தியில் இந்த வகை சுறா மீன்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி, சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இவை முழுவதும் அழிந்தன.

ஜெய்சல்மரில்  புதிதாக கண்டறியப்பட்டுள்ள பற்கள், ஸ்ட்ரோஃபோடஸ் ஜெய்சல்மரென்சிஸ் என்ற புதிய உயிரினத்திற்கு சொந்தமானது என்று ஆராய்ச்சி குழுவினர் தெரிவிக்கின்றனர்.‌ இந்த உயிரினம் இந்தியத் துணை கண்டத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டிருப்பதுடன், ஆசியாவில் ஜப்பான், தாய்லாந்தைத் தொடர்ந்து இது மூன்றாவது கண்டுபிடிப்பாகும். ஜுராசிக் காலத்திய முதுகெலும்புடைய புதைபடிவங்கள் குறித்த ஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755096

-----



(Release ID: 1755206) Visitor Counter : 241