நிதி அமைச்சகம்

அகமதாபாத்தில் வருமான வரித்துறை சோதனை

Posted On: 10 SEP 2021 5:06PM by PIB Chennai

அகமதாபாத்தை சேர்ந்த குழுமம் ஒன்றில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் 2021 செப்டம்பர் 8 அன்று வருமான வரித்துறை ஈடுபட்டது. குஜராத்தில் உள்ள முன்னணி குழுமமான இது, ஊடகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஈடுபட்டுள்ளது.

குழுமத்தின் ஊடகப் பிரிவில் மின்னணு, டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்கள் இயங்கி வருகின்றன. ரியல் எஸ்டேட் பிரிவு குறைந்த விலை வீடுகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பில் ஈடுபட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

பல வருடங்களாக இக்குழுமம் செய்து வந்த கணக்கில் வராத பரிவர்த்தனைகள் குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. டிடிஆர் (TDR) சான்றிதழ்களை விற்றதில் ரூ 500 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பண ரசீதுகள் குறித்த பெரும்பாலான ஆவணங்கள் சிக்கின.

ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் செய்யப்பட்ட ரூ 350 கோடிக்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள், ரூ 150 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய கடன் மற்றும் வட்டி குறித்த ஆதாரங்களும் சோதனையின் போது கிடைத்தன. ரூ 1 கோடி பணம் மற்றும் ரூ 2.70 கோடி மதிப்புடைய நகைகள் கைப்பற்றப்பட்டன.

மொத்தம் ரூ 1000 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753861

 

----



(Release ID: 1753928) Visitor Counter : 160