ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரபல பயண தொடரான ‘ராக் ராக் மே கங்கா’-வின் இரண்டாம் பாகம் தொடக்கம்

Posted On: 16 AUG 2021 7:30PM by PIB Chennai

பிரபல பயண தொடரான ராக் ராக் மே கங்கா’-வின் இரண்டாம் பாகத்தை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவாத் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் ஆகியோர், மத்திய ஜல்சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேலுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர்.

2019-ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இத்தொடரின் முதல் பாகத்தை நடிகர் ராஜீவ் கந்தேல்வால் தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சிக்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் இன்று தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் கூறுகையில், புனித நதியான கங்கை குறித்த பொறுப்புணர்வை மக்களிடையே உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றார். இம்முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைத்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நாட்டின் 40 சதவீத மக்கள் ஏதாவது ஒரு வகையில் கங்கை ஆற்று படுகையை தங்களது வாழ்வாதாரத்திற்காக நம்பி இருப்பதாகவும், ஆறுகளின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் சூழலியல் சமநிலை குறித்த புதிய நம்பிக்கை நாட்டு மக்களிடையே உருவாகியிருப்பதாகவும் திரு செகாவத் கூறினார். சூழலியல் பாதுகாப்பு குறித்து மக்கள் ஆர்வமாக இருப்பதாகவும், இதன் மூலம் புனரமைப்பு பணிகள் மற்றும் நாட்டு ஒற்றுமைக்கு புதிய உத்வேகம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கங்கையை ஆற்றை தூய்மைப்படுத்துவதில் கடந்த சில வருடங்களில் அடைந்துள்ள சாதனை பெருமையளிப்பதாக திரு செகாவத் கூறினார்.

நமாமி கங்கை திட்டத்தில் மக்கள் பங்குபெறுவதை ஊக்கப்படுத்தியதற்காக ஜல் சக்தி அமைச்சகத்தை பாராட்டிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இதன் மூலம் கங்கை பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாறி அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்றார்.

பொதுமுடக்கத்தின் போது ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அதிகமானோர் பார்த்ததாக கூறிய திரு தாகூர், தசாப்தங்களுக்கு பின்னரும் பிரபலமாக திகழும் தரமான நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் தூர்தர்ஷன் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். பல வருடங்களுக்கு பிரபலமாக திகழக்கூடிய வகையில் ராக் ராக் மே கங்கா’-வின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் இருக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் திரு மயங்க் குமார் அகர்வால், முதல் பகுதியை சுமார் 2 கோடி பேர் பார்த்ததாக தெரிவித்தார். இரண்டாம் பாகத்தை தொடங்குமாறு நாடு முழுவதிலும் இருந்து பல கடிதங்கள் தூர்தர்ஷனுக்கு வந்ததாக அவர் கூறினார்.

2021 ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், டிடி நேஷனல் அலைவரிசையில் இந்நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746466

*****************


(Release ID: 1746504) Visitor Counter : 212


Read this release in: English , Urdu , Hindi