பாதுகாப்பு அமைச்சகம்

சுதந்திர தினம் 2021-ஐ முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு வானொலி மூலம் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை

Posted On: 14 AUG 2021 7:39PM by PIB Chennai

எனதருமை ராணுவ சகோதரர்களே, சகோதரிகளே,

இன்று நள்ளிரவு முதல் விடுதலை அடைந்து 75-வது ஆண்டு எனும் முக்கிய கட்டத்திற்குள் நாடு நுழைகிறது. இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தில் நாடு முழுவதும் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. இமயமலையின் உயரங்களில் இருந்து கடல்களின் ஆழம் வரை, தார் பாலைவனத்தில் இருந்து வடகிழக்கில் உள்ள அடர்ந்த காடுகள் வரை நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படையின் தீரமிக்க வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றிமிக்க தேசத்தின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம் நமது ராணுவத்தை சேர்ந்த சுபேதார் நீரஜ் சோப்ரா இந்த வருட சுதந்திர தினத்தை இன்னும் மகிழ்ச்சிகரமானதாக ஆக்கி உள்ளார். செங்கோட்டையில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு சுபேதார் நீரஜ் உள்ளிட்ட ஒலிம்பிக் வெற்றியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

சுதந்திர தின நன்னாளில், நாட்டை பாதுகாக்க எப்போதும் தயாராக இருந்த முன்னாள் படைவீரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது அன்புக்குரிய இளைஞர்களை தேச சேவைக்கு அர்ப்பணித்துள்ள நமது வீரமிக்க சிப்பாய்களின் குடும்பங்களை யாராலும் மறக்க முடியாது.

நாட்டை காப்பதில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்த தீரமிக்க வீரர்களை நினைவுக்கூறும் நாளும் இதுவாகும். இந்தியர்கள் அனைவரும் உங்களோடு இருப்பதோடு, நன்றி மிக்க நாடு அவர்களை என்றும் நினைவுக்கூறும் என்று அந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

பண்டைய காலத்தில் இருந்தே இந்திய நாகரிகம் அமைதியையே விரும்பி வருகிறது. ஆனால், சக்தி இல்லாமல் அமைதி சாத்தியமில்லை.

அகிம்சை நமது தலையாய கடமையாக இருக்கும் போதிலும், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது அதே அளவு முக்கியமானதாகும். எனவே, நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய எதையும் தியாகம் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்.

எனவே, நாட்டின் அமைதி மற்றும் வளத்தை பேணிக்காக்க, நீர், நிலம் மற்றும் ஆகாயம் என நீங்கள் எங்கிருந்தாலும் எச்சரிக்கையுடனும், நாட்டை பாதுகாக்கிறோம் என்ற விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியம். குடும்பங்கள் மற்றும் உறவினரை பிரிந்து நீங்கள் நாட்டுக்கு ஆற்றும் பெரும் சேவையை நன்றிமிக்க தேசம் என்றுமே பாராட்டுகிறது.

அன்புமிக்க வீரர்களே, மாறிவரும் சூழலில் பாதுகாப்பின் பரிமாணங்கள் தொடர்ந்து மாறிவருகின்றன. எனவே, எந்த சவாலையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டுமென உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது, இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன்.

எனது உரையை நிறைவு செய்யும் தருவாயில், தாய்நாட்டை வணங்குவதில் நீங்கள் அனைவரும் கைகோர்க்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய தாய்க்கு வணக்கம்!

வந்தே மாதரம்!

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745890

*****************



(Release ID: 1745953) Visitor Counter : 191


Read this release in: English , Urdu , Hindi