ஆயுஷ்

ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சையில் ஹோமியோபதியை இணைப்பதற்கான நடவடிக்கைகள்

Posted On: 10 AUG 2021 5:29PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு:

ஹோமியோபதி கல்வி மற்றும் நடைமுறையை, தேசிய ஹோமியோபதி ஆணையச் சட்டம், 2020 ஒழுங்குபடுத்துகிறது. பன்மை மருத்துவமுறைகளை ஊக்குவிப்பதற்காக ஹோமியோபதி, இந்திய மருத்துவம் மற்றும் நவீன மருத்துவத்துடன் இந்தச் சட்டம் தொடர்பை ஏற்படுத்துகிறது. ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சையில் தரமான மற்றும் பயனளிக்கும் ஹோமியோபதியை இணைப்பதற்காக அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுள் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:

•        ஹோமியோபதி சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அவற்றை ஊக்குவிப்பதற்காக ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் உருவாக்கப்பட்டது. சிறந்த நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளில் இந்த கவுன்சில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சியில் புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பதற்கான தேசிய திட்டத்தில் யோகாவுடன் ஹோமியோபதியை ஒருங்கிணைப்பதில் இந்த மையம் வெற்றி அடைந்துள்ளது.

•   ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளை மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் வாயிலாக மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு நிதி உதவியுடன் தேசிய ஆயுஷ் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய மருத்துவ மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் ஆயுஷ் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் உருவாக்கப்படுகின்றன. அரசுத் துறையால் இயக்கப்படாத மாநிலங்களில் ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் கல்வி நிறுவனங்கள் நிறுவப்படும்.

சர்வதேச அளவில் ஹோமியோபதியை ஊக்குவிப்பதற்காக கனடா, இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுடன் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது. இந்த வகையில் நேபாளம், வங்கதேசம், மலேசியா, மங்கோலியா போன்ற பல்வேறு நாடுகளுடன் பாரம்பரிய மருத்துவமுறையில் ஒத்துழைப்பிற்காக, இந்திய அரசு 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவ முறையின் மேம்பாடு மற்றும்  ஒருங்கிணைந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், தென் ஆப்பிரிக்கா, மலேசியா, ஹங்கேரி போன்ற வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் ஆயுஷ் கல்விப் பிரிவை உருவாக்குவதற்கு 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744475

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744474

 

----



(Release ID: 1744564) Visitor Counter : 243


Read this release in: English , Urdu , Bengali