சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

காசநோயை ஒழிப்பதில் இந்தியாவின் முயற்சிகள் குறித்து எம்.பி.க்களுக்கு உணர்த்தும் நிகழ்ச்சி: குடியரசு துணைத் தலைவர், மக்களவை சபாநாயகர் தலைமை தாங்கினர்

Posted On: 09 AUG 2021 3:45PM by PIB Chennai

காசநோயை ஒழிப்பதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை எம்.பி.க்களுக்கு உணர்த்துவதற்கான நிகழ்ச்சிக்கு குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா ஆகியோர் இன்று தலைமை தாங்கினர்.

இந்நிகழ்ச்சியில், நாட்டில் காசநோய் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர் எடுத்துரைத்தனர். பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2018ம் ஆண்டில் கூறியபடி, 2025ம் ஆண்டுக்குள் காசநோயை விரைவில் ஒழிப்பதன் அவசியத்தையும் அவர்கள் விளக்கினர். 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்து குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு கூறுகையில், ‘‘மத்திய, மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அளவில் ஒருங்கிணைந்து செயல்படுவது, இதை மக்கள் இயக்கமாக மாற்ற உதவும் மற்றும் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் நமது முயற்சிகளை விரைவுபடுத்தும்’’ என்றார். சுதந்திரம் அடைந்ததில் இருந்து காச நோய் ஒழிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மூலம் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து 63 மில்லியன் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.  அரசு திட்டங்களை செயல்படுத்தி, காசநோயை ஒழிக்க, எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் முறையாக திட்டமிட்டு இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க, எம்.பி.க்கள் உறுதிமொழி எடுத்தனர்.

காசநோய்க்கு எதிராக கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா, இத்தகவலை நாடு முழுவதும் பரப்புவதில் எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தங்கள் தொகுதியில் காசநோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்படுகிறார்களா என்பதை உறுதி செய்வது எம்.பி.க்களின் பொறுப்பு என அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பேசுகையில், ‘‘நாட்டில் விரிவான சுகாதாரத்தை ஏற்படுத்தி அதை நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்பு படுத்தும் சிந்தனையை உருவாக்குவதில் பிரதமர் திரு நரேந்திரமோடி முக்கிய பங்காற்றினார்’’ என்றார். ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் திட்டம், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் போன்றவை இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744066

*****************



(Release ID: 1744210) Visitor Counter : 475