பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட்

Posted On: 09 AUG 2021 3:14PM by PIB Chennai

மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்கள் பின்வருமாறு:

ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு:

இந்திய ராணுவத்தின் வருவாய் நிதிநிலை அறிக்கை மற்றும் மூலதன கொள்முதல் நிதிநிலை அறிக்கையின் ஒதுக்கீடு, 2012-13 முதல் 2016-17 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தை விட 2017-18 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் 27.69% அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையில் ஊடுருவல் முயற்சிகள்:

பாதுகாப்புப் படைகள்/ உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 2021-ஆம் ஆண்டில் (30.06.2021 வரை) இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 33 ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 11 ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் இந்திய- வங்கதேச எல்லையில் 441 முயற்சிகள் நடைபெற்றன. ஒரு ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார். 740 ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 11 சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்திய-நேபாள எல்லையில் இந்த ஆண்டு (30.06.2021 வரை) கைது செய்யப்பட்டனர். இந்திய-சீன எல்லையில் எந்த ஊடுருவலும் பதிவாகவில்லை. மியான்மரில் 01.02.2021 முதல் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த பிறகு, இந்திய-மியான்மர் எல்லையில் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள்/ அகதிகளாக 8486 இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களுள் 5796 திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் மீதமுள்ள 2690 பேர் இன்னும் இந்தியாவில் உள்ளனர். கைது செய்யப்பட்ட ஊடுருவல்காரர்கள், எல்லை பாதுகாப்பு படையினரால் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஸ்பார்ஷ் அமைப்புமுறை:

ராணுவ ஓய்வூதியத்துக்கான ஒப்புதல் மற்றும் விநியோகத்தை தானாக மேற்கொள்வதற்கு ஏதுவான, ‘ஸ்பார்ஷ்என்ற ஒருங்கிணைந்த முறையினால் தமிழகத்தில் 191 பேர் புதுச்சேரியில் ஒருவர் உட்பட நாட்டில் மொத்தம் 3123 பேர் பயனடைந்து வருகிறார்கள்.‌ தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் இந்த முறை வழங்குகிறது. பாதுகாப்பு அமைச்சகம் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள சைபர் பாதுகாப்பு முகமை மற்றும் தனிநபர் மூன்றாம்தர கணக்கு தணிக்கையாளரால் இந்த முறை பாதுகாப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள், தொலைதூரத்தில் வசிப்பவர்கள் பயனடையும் வகையில் சேவை மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.‌

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள்:

பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் 9 பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு சம்பந்தமான உபகரணங்களின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. நிதி விஷயங்களில் தன்னாட்சி உரிமையை மேம்படுத்தவும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இது போன்ற நிறுவனங்களின் செருக்கு மற்றும் வளங்களில் குடிமக்களும் பங்கு பெறுவதற்கு இந்த முயற்சி வாய்ப்பளிக்கும். பாதுகாப்புத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரணங்களை வடிவமைத்து, உற்பத்தி செய்யும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

முன்னாள் படை வீரர்களுக்கான ஓய்வூதியம்:

ஆயுதப்படை வீரர்களுக்கான தற்போதைய ஓய்வூதிய கட்டமைப்பின்படி, ஓய்வு பெறுபவர்களுக்கான ஓய்வூதியம்/ சேவை ஓய்வூதியம், பணிக்கொடை, சிறப்பு பணிக்கொடை போன்ற ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன. தனி நபரால் பெறப்பட்ட கடைசி ஊதியங்களில் 50%ஆக ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. பல்வேறு ஊதிய குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில்  ஓய்வூதியம் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744048

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744046

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744043

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744041

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744039

*****************



(Release ID: 1744187) Visitor Counter : 205


Read this release in: English , Urdu , Punjabi