குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அவசரகால கடன் விவரம்

Posted On: 09 AUG 2021 2:55PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ரூ 3 லட்சம் கோடி பிணையில்லா தானியங்கி கடன்கள், அழுத்தத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ 20,000 கோடி துணை கடன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிதியின் கீழ் ரூ 50,000 கோடி நிதி, ரூ 200 கோடி வரையிலான கொள்முதல்களுக்கு சர்வதேச ஒப்பந்தங்கள் கோரப்படாது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு வலுவூட்டுவதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய அரசு எடுத்துள்ளது.

மேலும், 2021 ஜூலை 2 அன்று, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ரூ 2.73 லட்சம் கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ 2.14 கோடி வழங்கப்பட்டு விட்டது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கொவிட்-19 பெருந்தொற்று தற்காலிகமாக பாதித்தது. அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பை தேசிய சிறு தொழில்கள் கழகம் மற்றும் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் ஆய்வு செய்தன.

தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் ஆய்வின் படி 91 சதவீத சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. பணப்புழக்கம், புதிய ஆர்டர்கள், தொழிலாளர்கள், போக்குவரத்து மற்றும் மூலப் பொருட்கள் கிடைத்தல் ஆகியவை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஐந்து முக்கிய பிரச்சினைகள் என்றும் கண்டறியப்பட்டது.

காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் ஆய்வின் படி, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் 88 சதவீத பயனாளிகள் கொவிட்-19 காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். 12 சதவீதம் பேர் கொவிட்-19 காரணமாக தாங்கள் பலனடைந்ததாக தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டதாக தெரிவித்த 88 சதவீதம் பேரில் 57 சதவீதம் நபர்கள் தங்களது நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட காலத்தில் சிறிது காலத்திற்கு இயங்கவில்லை என்றும், 30சதவீதம் பேர் உற்பத்தி மற்றும் வருவாய் குறைந்ததாகவும் கூறினார்கள்.

பலனடைந்ததாக தெரிவித்த 12 சதவீதம் பேரில் 65 சதவீதம் நபர்கள் தங்கள் வணிகம் மேற்குறிப்பிட்ட காலத்தில் அதிகரித்ததாக கூறினர்.

46.60 சதவீதம் பேர் தாங்கள் முழு ஊதியங்களை பெற்றதாகவும், 42.54 சதவீதம் பேர் ஓரளவு ஊதியம் பெற்றதாகவும், 10.86 சதவீதம் பேர் மேற்குறிப்பிட்ட காலத்தில் ஊதியம் எதையும் பெறவில்லை என்றும் கூறினர்.

 நிதி ஆதரவு, வட்டி தள்ளுபடி மற்றும் தங்கள் பொருட்களுக்கு சந்தைப்படுத்துதல் ஆதரவு தேவை என்று பெரும்பாலான பயனாளிகள் தெரிவித்தனர்.

மத்திய புள்ளியியல் அலுவலகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் அனைத்திந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட மொத்த பங்களிப்பு முறையே 30.5 மற்றும் 30 சதவீதம் ஆகும்.

2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் அனைத்திந்திய மொத்த உற்பத்தி மதிப்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு முறையே 36.9 மற்றும் 36.9 சதவீதம் ஆகும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கொவிட்-19 பெருந்தொற்று தற்காலிகமாக பாதித்தது. அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் 8,46,650 கடன் வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 45,851.22 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் 8,36,065 கடன் வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 36,954.72 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22-ம் ஆண்டில் 2021 ஜூன் வரை 2,44,300 கடன் வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 13,315.95 கோடி மதிப்பிலான உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காதியின் இரண்டு புதிய பொருட்களான காதி குழந்தைகள் ஆடை மற்றும் காதி கைவினை காகித காலணிகளை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் 2021 ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தியது.

முதல் முறையாக, பிறந்த குழந்தைகள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆடைகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. கைகளால் செய்யப்பட்ட மென்மையான பருத்தி துணியில் குழந்தைகளின் மேனியில் ஒவ்வாமை ஏதும் ஏற்படாத வகையில் இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் கைவினைக் காகித காலணிகளையும் காதி நிறுவனம் உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மலிவான விலையிலும் இந்த காலணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பருத்தி மற்றும் பட்டு கந்தல்கள் மற்றும் வேளாண் கழிவுகள் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து இந்தக் காகிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. எடை குறைவான இந்த காலணிகளை பயணத்தின்போதும், வீடுகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744030

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744029

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744032

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744033

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744035

*****************


(Release ID: 1744144) Visitor Counter : 559


Read this release in: English , Urdu , Punjabi , Telugu