வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 84,67,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன மற்றும் 50,16,642 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன: மக்களவையில் தகவல்

Posted On: 05 AUG 2021 1:56PM by PIB Chennai

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 84,67,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன மற்றும் 50,16,642 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் திரு கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில், அவர் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட  கணக்கெடுப்பின் படி சுமார் 112.24 லட்சம் வீடுகள் தேவை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த திட்டங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் மொத்தம் 1,12,95,047 வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. இவற்றில்  84,67,568 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 50,16,642 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாநிலம் / யூனியன் பிரதேச வாரியாக வழங்கப்பட்ட வீடுகளின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

 33 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மழைநீர் சேகரிப்பு அம்சங்கள்:

மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் உருவாக்கிய, மாதிரி கட்டிட துணை சட்டங்களின் படி மழைநீர் சேகரிப்பு தேவைகளில் போதிய கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி 100 சதுர மீட்டர் இடமுள்ள அனைத்து கட்டிடங்களிலும், அனுமதிக்காக கட்டிட திட்டங்களை சமர்ப்பிக்கும்போது, முழுமையான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயம் சேர்க்க வேண்டும். அதன்படி, மழைநீர் சேகரிப்பு முறைகள் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பின்பற்றப்படுகின்றன

திடக் கழிவுகள் அகற்றம்:

நாட்டில் உள்ள 4,372 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / நகரங்களில் திடக் கழிவுகள் அறிவியல்பூர்வ முறைகளில் அகற்றப்படுகின்றன. மொத்தம் உள்ள 88,803 வார்டுகளில்,  86,228 வார்டுகளில் வீடு, வீடாக திடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. 72,493 வார்டுகளில், அங்கேயே குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள நகராட்சிகளில் நாள் ஒன்றுக்கு உருவாகும் 1,40,980 டன் குப்பைகளில், 68 சதவீதம்  96,259 டன் குப்பைகள் அறிவியல் ரீதியாக அகற்றப்படுகின்றன.

நடைப்பாதை வியாபார சூழலை வலுப்படுத்துதல்

நகர்ப்புறத்தில் உள்ள நடைப்பாதை வியாபாரிகளுக்கு உதவ, தீன்தயாள் அந்தியோதையா திட்டம் - தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தை (DAY-NULM), வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமாக அமல்படுத்தி வருகிறது. நடைப்பாதை வியாபாரிகளின் வாழ்வாதார விஷயங்களான தகுந்த இடம் கிடைக்கச் செய்வது, கடன் வசதி, சமூக பாதுகாப்பு வசதி போன்றவற்றை செய்து கொடுப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது. மாநில பங்கு உட்பட, மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத தொகையை நடைபாதை வியாபார கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் செலவிட முடியும்

மேலும், நடைபாதை வியாபாரிகளுக்கு மூலதன கடன் வழங்க பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் கடந்தாண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தி்ன கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடைப்பாதை வியாபாரிகள் ரூ.10,000 கடன் பெற்று தங்கள் தொழிலை மீண்டும் தொடர முடியும்.

நடைபாதை வியாபாரிகளின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம்ஸ்வாநிதி சே சம்ரிதிஎன்ற திட்டத்தை 125 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஜனவரி 4ம் தேதி தொடங்கியது.

இத்திட்டம் பிரதமரின் ஸ்வாநிதி திட்ட பயனாளிகளையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், மத்திய அரசின் நலத்திட்டங்களான பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதமரின் சுரக்‌ஷா பீமா யோஜனா, பிரதமரின் ஜன் தன் யோஜனா போன்றவற்றுடன் இணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக்  காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742688

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742689

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742690

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742691

                                                                               ------



(Release ID: 1742933) Visitor Counter : 299


Read this release in: English , Telugu