எரிசக்தி அமைச்சகம்

தடையற்ற மின்சார விநியோகம், உற்பத்தித் திறன், மின்சார தேவை குறித்த கேள்விகளுக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் திரு ஆர் கே சிங் அளித்த பதில்

Posted On: 05 AUG 2021 1:26PM by PIB Chennai

மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக  இன்று அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

எரிசக்தியை நுகர்வோருக்கு விநியோகிக்கும் பொறுப்பு, மாநில அரசுகள் அல்லது மாநில எரிசக்தி நிறுவனங்கள் வசம் உள்ளது. ஏப்ரல் 2019 முதல், அனைத்து வீடுகள், தொழில்துறைகள் மற்றும் வர்த்தக நுகர்வோருக்கு எரிசக்தியை விநியோகிக்கவும், வேளாண் சார்ந்த நுகர்வோருக்குப் போதிய எரிசக்தியை வழங்கவும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அனைத்து வீடுகளுக்கும் தடையில்லாத மின்சாரத்தை விநியோகிப்பதற்காக தீனதயாள் உபாத்தியாயா கிராம ஜோதி யோஜனா திட்டம், ஒருங்கிணைந்த எரிசக்தி விநியோகத் திட்டம், மின் பகிர்மான திட்டம் (உதய்) போன்ற ஏராளமான திட்டங்கள் வாயிலாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது. சௌபாக்கியா திட்டத்தின் கீழ் அதன் தொடக்கம் முதல் 31.3.2021 வரை 2.817 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதாக மாநிலங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் (30.6.2021 வரை), தீனதயாள் உபாத்தியாயா கிராம ஜோதி யோஜனா திட்டம், சௌபாக்கியா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த எரிசக்தி விநியோகத் திட்டத்திற்காக மாநிலங்களுக்கு முறையே ரூ. 27,327 கோடி, ரூ. 3,868 கோடி மற்றும் ரூ. 15,902 கோடி உதவித்தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. தன்னிச்சையான ஆய்வுகளின் அடிப்படையில் ஊரகப் பகுதிகளில் மின்சார விநியோகம் 2015-16 ஆண்டின் 12 மணி நேரங்களை விட அதிகமாக, 2020-ஆம் ஆண்டில் 20.50 மணி நேரங்களாக உள்ளது. நகர்ப்புறங்களில் இந்த இலக்கம் 22.23 மணி நேரங்களாக உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சராசரி மின்சார வரத்து, கிராமப்புறங்களில் 22.17 மணி நேரங்களாகவும், நகர்ப்புறங்களில் 23.36 மணி நேரங்களாகவும் இருந்தது.

எல்இடி விளக்குகளின் உற்பத்தியில் தன்னிறைவு:

பொது கொள்முதல் (மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை) ஆணை, 2017-இன் கீழ், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் ஆணைக்கிணங்க எரிசக்தித் துறையில் உள்ளூர் விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்குமாறு எரிசக்தி அமைச்சகம் கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. எல்இடி விளக்குகளின் உற்பத்தியில் தற்சார்பை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவதுடன், உள்நாட்டு உற்பத்தியும் ஊக்குவிக்கப்படும். மேலும், பரிசோதனைக்குப் பிறகு அனைத்து எல்இடி பொருட்களையும் பதிவு செய்வதற்கான புதிய கொள்கையை வர்த்தகத்துறை அறிவித்துள்ளது.

எரிசக்தி உற்பத்தித் திறன்:

30.06.2021 வரை எரிசக்தியின் திறன் 384115.94 மெகாவாட் ஆகும். இதில் அனல் மின்சக்தியின் திறன் 234058.22 மெகாவாட், நீர் மின்சக்தியின் திறன் 46322.22 மெகாவாட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் உற்பத்தித் திறன்  96955.51 மெகாவாட் மற்றும் அணு எரிசக்தியின் திறன்  6780 மெகாவாட் ஆகும். எதிர்காலத்தில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக பல்வேறு திட்டங்களும் இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 2024-25ஆம் ஆண்டிற்குள் உருவாக்கப்படவுள்ள எரிசக்தித் திட்டங்கள், கட்டுமானப் பணியின் பல்வேறு நிலைகளில் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டின் இறுதிக்குள்  1,75,000 வாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாசு இல்லாத, தூய்மையான எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவை அடையவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எரிசக்தி உற்பத்தியின் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகள்:

உள்நாட்டு நிலக்கரியின் பயன்பாட்டில் மத்திய மற்றும் மாநில எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களிடையே நெகிழ்வுத் தன்மையை அனுமதித்து, 2016-ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் உற்பத்தி செலவும், போக்குவரத்து செலவும் குறையும். குறைந்த செலவில் நிலக்கரியை உற்பத்தியாளர்கள் பெறுவதற்கு வசதியாக சக்தி-2017 திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தரமான குறைந்த செலவிலான ஆலைகளிலிருந்து மின்சாரம் முதலில் விநியோகம் செய்யப்படுவதற்காக மாநிலங்களிடையே உற்பத்தி செய்வதற்கான நிலையங்களை அமைப்பதற்கு ஒரு அமைப்புமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எரிசக்தியின் அதிகபட்ச தேவை:

நாட்டில் தற்போது நிறுவப்பட்டுள்ள எரிசக்தி ஆலைகளின்  திறன் சுமார் 384 ஜிகாவாட் ஆகும். இது நாட்டின் மின்சார தேவையை விட மிக அதிகமாகும். இதுவரையிலான மின்சார தேவையில் அதிகபட்சமாக, 07.07.2021 அன்று 200.6 ஜிகாவாட்டாக இருந்தது. நாடு முழுவதும் ஒரே சீரான மின்சார கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஒரு மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். மின்சார கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான சீரான அணுகுமுறைக்கு கட்டணக் கொள்கை வழிவகுக்கிறது. எரிசக்தி விநியோக நிறுவனங்களுக்கு பல்வேறு அம்சங்களைப் பொருத்து கட்டணங்களை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது. எரிசக்தி பகிர்தலின் வாயிலாக போட்டித் தன்மையை அரசு ஊக்குவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742677

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742676

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742675

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742674

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742672

 

------


(Release ID: 1742783) Visitor Counter : 297
Read this release in: English , Urdu , Bengali , Malayalam