சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதாரத் துறையின் பல்வேறு திட்டங்கள்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மாநிலங்களவையில் தகவல்

Posted On: 03 AUG 2021 3:25PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

புதிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை:

மக்கள் தொகையை நிலைபடுத்துவதற்கானக் கொள்கைத் திட்டங்களுக்கிணங்க, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 2005-ஆம் ஆண்டில் தேசிய சுகாதார இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தத் திட்டம் கூடுதல் வலுப்பெற்றது. தேசிய சுகாதாரக் கொள்கை, 2017, மக்கள் தொகையை நிலைப்படுத்துவதற்குக் கொள்கை சார்ந்த வழிகாட்டுதல்களை அளிக்கிறது. குறிப்பிட்ட 7 மாநிலங்களின் 146 மாவட்டங்களில் கருத்தடைச் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுக்குப் பிந்தைய நோய்கள்:

கொவிட்-19 தொற்றின் விளைவுகள் மற்றும் மருத்துவச் சிகிச்சை குறித்தத் தகவல்களைச் சேகரிப்பதற்காக நாடு முழுவதும் 20 இடங்களில் கொவிட் மருத்துவப் பதிவு அலுவலகத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் உருவாக்கியுள்ளது. இந்தத் தகவல், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் பற்றியது மட்டுமே. பெருநாடி, நுரையீரல் அழற்சி போன்ற கொவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கொவிட் தொற்றுக்குப் பிந்தைய பிரச்சனைகள்/ நிலைகள் பற்றிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக நிபுணர் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்:

நிதி ஆயோக்கின் அறிவுரையின்படி, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்த மதிப்பீடு 2020-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டது, அதில் தெரியவந்தது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் -IV மற்றும் அதன் நீட்டிக்கப்பட்டப் பகுதி (2012-21) ஆகியவை, திட்டத்தின் துவக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை சிறப்பாக எட்டியுள்ளன. இந்தத் திட்டத்தின் நிதி முறைகேடுகள் குறித்த எந்தத் தகவலும் மதிப்பீட்டில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதுபோன்ற எந்த நிகழ்வும் அரசின் பார்வைக்குக் கொண்டு வரப்படவில்லை. கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் முறையே 93.7%, 94.9% மற்றும் 97.1% நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்களின் சேவைக்கு அங்கீகாரம்:

கொவிட்-19 சம்பந்தமான பணிகளில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களின் சேவைகளை அங்கீகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி குறைந்தபட்சம் இந்தப் பணிகளில் 100 நாட்கள் ஈடுபட்டவர்கள், இந்திய அரசின் பிரதமரின் மேன்மைமிகு கொவிட் தேசியச் சேவை அங்கீகாரத்தைப் பெறுவார்கள். கொவிட் சம்பந்தமான வேலைகளில் குறைந்தபட்சம் 100 நாட்களை நிறைவு செய்வோருக்கு மருத்துவம் சார்ந்த தொழில்களின் முறையான அரசு நியமனத்தில் மாநிலங்களும், யூனியன் பிரதேச அரசுகளும் முன்னுரிமை வழங்க  வேண்டும். 2020-21-ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான மத்திய தொகுப்பில்கொவிட் போராளிகளின் குழந்தைகள்' என்ற புதிய பிரிவை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

கொவிட்- 19 தொற்றுக்கு மாநிலங்களுக்கான சிறப்பு நிதி:

கொவிட்- 19 மேலாண்மை சம்பந்தமான அனைத்து அம்சங்களுக்கும் ஆதரவு அளிக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்கவும் தேவையான நிதி உதவியை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகிறது. 2019-20 நிதி ஆண்டில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ. 1113.21 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. 2020-21 நிதியாண்டில் இந்திய கொவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்புமுறை தயார்நிலை தொகுப்பிற்காக ரூ. 8257.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொகுப்பின் இரண்டாவது கட்டமாக ரூ. 23,123 கோடி நிதி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ. 1827.78 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30, 2021 வரை 4.23 கோடி என்-95 முகக் கவசங்களும், 1.77 கோடி முழு உடல் கவச உடைகளும், 48,420 செயற்கை சுவாசக் கருவிகளும், 1.03 கோடி ரெம்டெசிவர் குப்பிகளும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்/ மத்திய அரசின் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31, 2021 வரை 48.40 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மேலும் ஏராளமான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம்:

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் மருத்துவமனைகளில் ஏற்படும் பிறப்பு விகிதம் தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு (என்எஃப்ஹெச்எஸ்)-3-இன் 38.7% விட அதிகமாக, என்எஃப்ஹெச்எஸ்-4 இல் 78.9% பதிவாகியுள்ளது. 22 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட என்எஃப்ஹெச்எஸ்-5-இன் முதல்கட்ட கணக்கெடுப்பின்படி 14 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 90%கும் அதிகமான பிறப்புகள் மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன.

 

மத்திய அரசின் நிதி உதவியில் இயங்கும் மருத்துவ கல்லூரிகள்:

மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடியதற்போது இயங்கும் மாவட்ட/ பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் தொடர்புடைய புதிய மருத்துவ கல்லூரிகளை உருவாக்குதல்திட்டத்தை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களில் 157 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 47 கல்லூரிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. மேலும் 36 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் முகமையாக செயல்படும் மாநில அரசுகள், திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகளை மேற்கொள்கின்றன.

சுகாதார அமைச்சரின் விருப்ப மானியம்:

ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகள், இலவச மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படாத உயிர்க்கொல்லி நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அனுமதி, சிகிச்சை பெறுவதற்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் நிதி உதவியைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சரின் விருப்ப மானியம் வழங்கப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1.25 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள். கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் முறையே 78,19 மற்றும் 5 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741849

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741847

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741848

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741846

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741845

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741844

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741842

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741843

 

----

 



(Release ID: 1742051) Visitor Counter : 1345