பாதுகாப்பு அமைச்சகம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை ஊக்கப்படுத்துவதற்காக அரசு ஏராளமான கொள்கைகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளது: மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட்

Posted On: 02 AUG 2021 3:02PM by PIB Chennai

மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட், கீழ்க்காணும் தகவல்களை மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ள உபகரணங்கள்:

கடந்த சில ஆண்டுகளில் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் தனுஷ்பீரங்கி, பாலம் அமைக்கும் டாங்கி, ‘தேஜாஸ்இலகுரக விமானம், ‘ஆகாஷ்ஏவுகணை, ‘ஐஎன்எஸ் கல்வாரி' நீர்மூழ்கிக் கப்பல், கண்காணிப்புக் கப்பல்கள், ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் கந்தேரி உள்ளிட்ட ஏராளமான குறிப்பிடத்தக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உரிமம் மூலம் நாடு முழுவதும் தனியார் துறையினர் பாதுகாப்பு துறையில் பங்கு பெறுவதற்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது பிகார் மாநிலத்தின் நாளந்தாவில் ஆயுத தொழிற்சாலை இயங்குகிறது

ஆயுதத் தொழிற்சாலை ஊழியர்களின் நலன் பாதுகாப்பு:

ஆயுதத் தொழிற்சாலை வாரியம் நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு, அதன் ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதில் அரசு உறுதிப் பூண்டுள்ளது. இதன்படி, , பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள், புதிதாக உருவாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவர். அவர்களது நியமன தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு அயற்பணியில் அதற்கான படித் தொகையின்றி பணியாற்ற வேண்டும்.  ஊழியர்கள் அனைவரும், பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள ஆயுதத் தொழிற்சாலை இயக்குனரகத்திற்கு மாற்றப்படுவர். அதுவரையில், அவர்களுக்கு மத்திய அரசின் ஊழியர்களுக்கான அனைத்து விதிமுறைகளும் பொருந்தும். அதன்படியே சம்பளம், படி, விடுமுறை, ஒய்வூதிய பலன்கள் இருக்கும். ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியத்தை அரசே தொடர்ந்து ஏற்கும்.

ஆயுதப் படைகளுக்கு நவீன தொழில்நுட்பம்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய அதிநவீன தளங்கள், ஆயுதங்கள் மற்றும் உணரிகள், ஆயுதப் படைகளுக்கு தொழில்நுட்ப உதவியை அளிக்கவும் திறனை மேம்படுத்தவும் பயன்படுகிறது. ஏவுகணை அமைப்புகள், வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு, போர் விமானங்கள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகள், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், தொலை தூர ரேடார்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் உபகரணங்கள்/ அமைப்பு முறைகளை மேம்படுத்துவதற்காக டிஆர்டிஓ திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு சேவைகளை நவீனமயமாக்குவதற்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 23.78% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்:

 

பாதுகாப்புத் துறையில் தற்சார்பை ஊக்குவிப்பதற்காக ஏராளமான கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் அரசு மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும். இதன் மூலம் இறக்குமதி மீதான சார்பும் வெகுவாகக் குறையும். மூலதன கொள்முதலுக்காக நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ. 1,11,463.21 கோடியில் ரூ. 71,438.36 கோடியை உள்நாட்டு மூலதன கொள்முதலுக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நிதியாண்டுகள் மற்றும் தற்போதைய நிதியாண்டில் ஆயுத படைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 60% இந்தியர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் பாதுகாப்பு பொருட்களின் தயாரிப்பு:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் நடப்பு மே மாதத்தில் முறையே 101 மற்றும் 108 பொருட்கள் அடங்கிய இரண்டு நேர்மறையான உள்ளூர்மயமாக்கல் பட்டியல்களை (முந்தைய எதிர்மறை பட்டியல்கள்) மத்திய அரசு அறிவித்தது. இந்த பொருட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலத்திற்குப் பிறகு இவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப் படைகளின் தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டிலேயே இந்தப் பொருட்களை தயாரிக்க இதன்மூலம் இந்திய பாதுகாப்பு தொழில்துறைக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்தப் பொருட்களின் இறக்குமதிக்கான தடைக்காலம் 2020 டிசம்பர் முதல் 2025 டிசம்பர் வரை பரவியுள்ளது. மாதிரிகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பிற்கு இரண்டு அல்லது அதற்குப் மேற்பட்ட ஆண்டுகள் தேவைப்படும் என்பதால், அந்நிய பரிமாற்றம் மீதான சேமிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த மதிப்பீட்டை தற்போதைய நிலையில் மேற்கொள்ள இயலாது.

கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள்:

தேசிய அளவில் கொவிட்-19 தொற்றை எதிர்கொள்வதற்காக டிஆர்டிஓ ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த புரிதல் குறைவாக இருந்த காலகட்டத்திலும், பற்றாக்குறை நிலவிய போதும், கிருமிநாசினிகள், என்95, என்99 போன்ற முகக்கவசங்கள் , முழு உடல் கவச உடைகள் உள்ளிட்டவற்றை டிஆர்டிஓ உருவாக்கி, இந்த தொழில்நுட்பங்கள் ஏராளமான தொழில் துறைகளுக்கு இலவசமாக மாற்றித் தரப்பட்டது. தில்லி, பிகார், உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்காலிக கொவிட்-19 மருத்துவமனைகளை இந்த அமைப்பு நிறுவியது. தேசிய அளவில் கொவிட்-19 பரிசோதனையை அதிகரிக்கும் முயற்சிகளிலும் டிஆர்டிஓ தேவையான ஆதரவை அளித்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 2-டிஜி என்ற சிகிச்சை முறையை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் கீழ் நாடு முழுவதும் டிஆர்டிஓ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட 866 மருத்துவப் பிராணவாயு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தனிநபரின் எஸ்பிஓ2 அளவை உணர்ந்து அதற்கு தகுந்தவாறு பிராணவாயுவை விநியோகிக்கும் தனித்துவம் வாய்ந்த அமைப்பு முறையான ஆக்ஸிகேரை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது.

விமானப் படையை நவீனமயமாக்கல்:

உள்ளூர்மயமாக்கல், தரம் உயர்த்த மற்றும் ஒருங்கிணைத்தல் உள்ளிட்டவை அடங்கிய பல்முனை அணுகுமுறைகளுடன் விமானப்படையை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ஆயுதங்கள், மேம்பட்ட விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் துல்லியமான திட்டமிடும் அணுகுமுறை, இந்திய விமானப்படையை நவீன இணைப்பை மையமாகக் கொண்ட   படையாக மாற்றியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741477

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741478

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741476

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741475

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741472

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741474

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741471

*****************(Release ID: 1741599) Visitor Counter : 271


Read this release in: Urdu , Telugu , English