உள்துறை அமைச்சகம்

உத்தரப் பிரதேச மாநில தடயவியல் அறிவியல் நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா லக்னோவில் அடிக்கல் நாட்டினார்

Posted On: 01 AUG 2021 6:22PM by PIB Chennai

உத்தரப் பிரதேச மாநில தடயவியல் அறிவியல் நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா லக்னோவில் இன்று அடிக்கல் நாட்டினார். மரக்கன்று ஒன்றையும் மத்திய உள்துறை அமைச்சர் நட்டார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் திரு கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் டாக்டர் தினேஷ் சர்மா, உத்தரப் பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர், மூத்த அதிகாரிகள் மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், மிகப்பெரிய வளாகத்தைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில தடயவியல் அறிவியல் நிறுவனத்திற்கு நல்லதொரு தொடக்கம் கிடைத்துள்ளதாக கூறினார். இதன் விதை இன்று விதைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலமரம் வளரும் போது பல மாணவர்களுக்கு பலனளிக்கும் என்று அவர் கூறினார். இங்கு நடைபெறும் ஆராய்ச்சியில் பல மாணவர்கள் கலந்துக் கொண்டு உத்திரப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு அமைப்புக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைப்பின் முதுகெலும்பாக திகழ்வார்கள் என்று அமைச்சர் கூறினார்.

எங்களது கட்சி தலைமையிலான அரசுகள் சாதி மற்றும் குடும்பங்களின் அடிப்படையில் நடத்தப்படுவதில்லை, எங்கள் தலைவர்களின் குடும்பங்களின் நலனுக்காக செயல்படுவதில்லை. மாறாக, நாட்டின் ஏழ்மையான மக்களின் மேம்பாட்டிற்காகவும் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதற்காகவும் எங்களது அரசுகள் பணியாற்றுகின்றன என்று திரு அமித் ஷா கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மக்களின் நலனுக்காக பணியாற்றும் மாநில அரசுகளில் உத்தரப் பிரதேசம் முன்னணியில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். ஆட்சி என்பது ஒரு குறிப்பிட்ட சாதி, குடும்பத்திற்கானதாக இருக்காது, அனைவருக்கானதாக இருக்கும், ஒரு சில கட்டுமான தொழில் அதிபர்கள் அல்லது பணக்காரர்களுக்கானதாக இருக்காது, ஏழைகளுக்கானதாக இருக்கும் என்று நாங்கள் உறுதி அளித்தோம். இன்றைக்கு, நான்கு வருடங்களுக்கு பிறகு, இந்த திசையில் நாங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்று என்னால் பெருமையாக கூற முடியும் என்று அவர் கூறினார்.

குற்றவாளிகளுக்கு அறிவியல் பூர்வமான முறையில்

தண்டனை அளிப்பதற்கு நீதித்துறைக்கு தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் உதவும் என்று திரு அமித் ஷா கூறினார். தண்டனை விகிதத்தை அதிகப்படுத்தி, குற்றங்களின் எண்ணிக்கையை இது குறைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை 2020-ம் ஆண்டு நாங்கள் தொடங்கினோம். பயிற்சி பெற்ற மனித சக்தி நமக்கு கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளை இணைக்க இந்த பல்கலைக்கழகம் பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.

 இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தவாறு காவல் பணி தற்போது இல்லை என்று அமைச்சர் கூறினார். கள்ளப்பணம், போதை மருந்துகள், போதை மருந்து பயங்கரவாதம், தீவிரவாதம், சைபர் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள், ஆயுதக் கடத்தல் மற்றும் பசு கடத்தல் ஆகியவை தற்போது முன்னணியில் இருப்பதாக அவர் கூறினார். நாடு முழுவதும் உள்ள காவல் துறையை நவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

 மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1741279

*****************



(Release ID: 1741309) Visitor Counter : 290