பாதுகாப்பு அமைச்சகம்
இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு: மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எல்லை சாலைகள் நிறுவனம்
Posted On:
31 JUL 2021 4:00PM by PIB Chennai
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எல்லை சாலைகள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. லாஹூல் & ஸ்பிடி பள்ளத்தாக்கில் உள்ள மணாலி-சர்ச்சு சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சிம்லாவில் உள்ள எல்லை சாலைகள் நிறுவனத்தின் தீபக் பிரிவு, மீட்பு மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணிக்கு பயிற்சி பெற்ற பொறியாளர் பணிக்குழுவை உடனடியாக அனுப்பி வைத்தது.
ஜூலை 29 அன்று மணாலி லே சாலையில் சர்ச்சு அருகே ஒரு தடத்தில், மிக அதிக உயரம் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் போதிய பிராணவாயு கிடைக்காமல் அவதிப்பட்டனர். தொடர் நிலச்சரிவுகள் மத்தியிலும் எல்லை சாலைகள் நிறுவனத்தின் குழுவினர் கடினமாக பணியாற்றி பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். எனினும், தீபக் பிரிவைச்சேர்ந்த திரு நாயக் ரித்தேஷ் குமார் பால் என்பவர் மீட்பு நடவடிக்கைகளின் போது உயிரிழந்தார். பிறகு இந்த சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.
மற்றொரு நிகழ்வில், ஜூலை 27 அன்று கடும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட கிலர்-டண்டி சாலையில் ஒரு பொறியாளர் பணிக்குழு பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தப் பகுதியில் 2 பயணிகள் வாகனங்கள் சிக்கியிருந்தன. ஏற்கனவே இரண்டு நிலச்சரிவுகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட குழு, இரவு முழுவதும் செயல்பட்டு பொதுமக்களைக் காப்பாற்றியது. இந்த நடவடிக்கையின் போது ஒரு வாகனத்துடன் மீட்புக் குழுவின் ஒரு சில உறுப்பினர்களும் ஆறு பொதுமக்களும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர். இளநிலை பொறியாளர் திரு ராகுல் குமார் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். எஞ்சியவர்களை எல்லை சாலைகள் நிறுவனத்தின் வீரர்கள் பத்திரமாக மீட்டனர்
நிலச்சரிவில் சிக்கியிருந்த பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740982
*****************
(Release ID: 1741033)
Visitor Counter : 269