பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் 50,484 வழக்குகள் நிறைவு: மக்களவையில் தகவல்

Posted On: 30 JUL 2021 5:13PM by PIB Chennai

போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம்,  2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 
அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: 

இளம் வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை: 
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வாரியாக  14 முதல் 18 வயதினர் மற்றும் 18 முதல் 30 வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை இணைப்பு -1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டுகளில்,  இதே வயதுப் பிரிவினரில் காரணம் மற்றும் பாலின அடிப்படையிலான தற்கொலை எண்ணிக்கை இணைப்பு-2-ல் கொடுக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையங்கள்: 
மாநில வாரியாக, உருவாக்கப்பட்ட மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையங்கள், தற்போது செயல்பாட்டில் உள்ளவை, குழந்தை பாதுகாப்பு சேவை திட்டத்தின் கீழ் உதவி அளிக்கப்படுபவை போன்ற விவரங்கள் இணைப்பு -1-ல் உள்ளன.   கடந்தாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிதி விவரங்கள் இணைப்பு-2-ல் உள்ளன. 

குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம்
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவல் படி, கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் முதல் கடந்த மே 28ம் தேதி வரை பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரம் இணைப்பு ஒன்றில் உள்ளது. 
கடந்த நிதியாண்டில், முந்தைய ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் வழங்கப்பட்ட நிதி விவரங்கள் இணைப்பு-2-ல் உள்ளது. 
கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவ பிரதமரின் நலநிதி திட்டத்தை மாண்பு மிகு பிரதமர் அறிவித்துள்ளார். இத்திட்டம் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும். இதை  23 வயது வரை எடுக்க முடியாது. ஆனால் 18 வயதிலிருந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு படிக்கும் காலத்தில் தனிப்பட்ட தேவைக்கு மாதாந்திர உதவித் தொகை பெற  இந்த தொகுப்பு நிதி பயன்படுத்தப்படும். 23 வயதில் முழுப் பணத்தை பெறலாம்.  இத்திட்டம் குறித்து  pmcaresforchildren.in என்ற இணையதளத்தில் அறியலாம். 

ஆதரவற்ற குழந்தைகள் :
நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்காக சிறுவர் நீதி (குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 (ஜேஜே சட்டம்) உள்ளது.  இச்சட்டம் ஆதரவற்ற குழந்தைகளின் நலனை உறுதி செய்கிறது. சிக்கலான சூழலில் உள்ள குழந்தைகளுக்கு உதவ, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவையின் கீழ் குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.  இந்த சட்டத்தையும், திட்டத்தையும் அமல்படுத்த வேண்டிய பொறுப்பு மாநிலங்களைச் சார்ந்தது. குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை உள்ளடக்கிய ‘‘வத்சல்யா திட்டம்’’ 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டது. 

குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள்: 
குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ் மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக உள்ள மொத்த குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் அங்கு இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் ஆகியவை இணைப்பு -1-ல் உள்ளது. 

ஊட்டச்சத்து மறுவாழ்வு :
நாட்டில் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க போஷன் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 6 வயது குழந்தைகள்,  இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின்  ஊட்டச்சத்து நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் துணை ஊட்டச்சத்து திட்டம்:
தர உறுதி, பணி, பொறுப்பாளர்களின் பங்குகள் மற்றும் பொறுப்புகள், தரவு மேலாண்மை, வெளிப்படைத் தன்மைக்கான போஷன் கண்காணிப்பு, துணை ஊட்டச்சத்து விநியோகத்தில் செயல்திறன் மற்றும் பொறுப்பு ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியுள்ளது. இதன்படி கொள்முதலுக்ககான வெளிப்படையான நடைமுறையை மாநிலங்கள் அறிமுகம் செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வகுத்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். 

போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள்: 
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (The Protection of Children from Sexual Offences (POCSO) Act,) போக்ஸோ சட்டம் 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.  இச்சட்டத்தின்படி, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்த 30 நாட்களுக்குள், குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதன் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் கூடிய விரைவில்  அல்லது ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் இச்சட்ம் 2019ம் ஆண்டு திருத்தப்பட்டது. 

மத்திய அரசின் திட்டம் மூலம், 389 பிரத்தியேக போக்ஸோ நீதிமன்றங்கள் உட்பட,  1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நீதித்துறை அமல்படுத்தியது. நீதித்துறை தெரிவித்த தகவல்படி, 640 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், 338 போக்ஸோ நீதிமன்றங்கள் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ளன. இவை 2021 மே மாதம் வரை  நிலுவையில் இருந்த 50,484 வழக்குகளை முடித்துள்ளன. 

வளர்ப்பு பராமரிப்பு மற்றும் நிதியுதவி :
சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து அமல்படுத்தப்படுகிறது.  இத்திட்டத்தின் விதிமுறைகள் படி, நிறுவனம் சாரா குழந்தை பராமரிப்புக்காக ஒரு குழந்தைக்கு மாதத்தோறும் ரூ.2000/- அளிக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்துக்கு ரூ.10 லட்சம் வரை இந்த நிதியளிக்கப்படுகிறது. 

கொவிட் பாதிப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்பு:
கொரோனோவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு சிறார் நீதி சட்ட விதிமுறைகள் படி உடனடி நடவடிக்கை எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. 

இளம் பெண்கள் இடையே மாதவிலக்கு சுகாதாரம்: 
மாதவிடாய் சுகாதார முறைகளை மேம்படுத்த பல அமைச்சகங்களின் மூலமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்த்யா கார்யகிரம் திட்டத்தின் கீழ் 10 வயது முதல் 19 வயது இளம் பெண்கள் இடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. 
மத்திய அரசின் மருந்தக துறை,  சுவிதா நேப்கின்களை  ரூ.1க்கு, நாடு முழுவதும் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தகம் மூலம் விற்பனை செய்கிறது.  

அங்கன்வாடி மையங்கள்: 
அங்கன்வாடி மையங்களின் செயல்பாட்டை வலுப்படுத்த மத்திய அரசு 4 அடுக்கு கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளது. மாநில வாரியாக உள்ள அங்கன்வாடி மையங்கள், அவற்றுக்கு வழங்கப்பட்ட நிதி விவரங்கள் இணைப்பு 1 மற்றும் 2-ல் உள்ளன. 

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் :

தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்கிய தகவல் படி,  மாநிலங்கள் / யூனியன் பிரதேச வாரியாக உள்ள போக்ஸோ சட்ட வழக்குகள், குற்றப் பத்திரிக்கைகள், தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகள், தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740748
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740744
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740743
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740742
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740740 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740741 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740739 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740738 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740727 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740726
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740724 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740723 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740721

*****************



(Release ID: 1740922) Visitor Counter : 2050


Read this release in: English , Urdu , Telugu