உள்துறை அமைச்சகம்

ஜம்மு&காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது குறித்து அமைச்சரின் பதில்

Posted On: 28 JUL 2021 4:53PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஜம்மு&காஷ்மீரில் நிலைமை சீரடைந்தவுடன் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அரசமைப்பு மாற்றங்கள் மற்றும் ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு&காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை தொடர்ந்து, தேச பாதுகாப்பு மற்றும் ஜம்மு&காஷ்மீர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இணையம் மற்றும் கைபேசி சேவைகள் போன்ற தொலைதொடர்பு வசதிகளுக்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவ்வப்போது நிலைமை ஆய்வு செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, 2021 பிப்ரவரி 5 முதல் ஒட்டுமொத்த ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் 4ஜி இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டன.

தீவிரவாத சம்பவங்களை பொருத்த வரை, 2019 உடன் ஒப்பிடும் போது 2020-ல் 59 சதவீதமும், 2020 ஜூன் வரையிலான சம்பவங்களுடன் ஒப்பிடும் போது 2021 ஜூன் வரை 32 சதவீதமும் குறைந்துள்ளன.

வர்த்தக நிறுவனங்கள், பொது போக்குவரத்து, அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. பயங்கரவாதத்தை முற்றிலும் பொறுத்துக்கொள்ளாத கொள்கையை பின்பற்றி வரும் அரசு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சட்டத்திற்கு புறம்பான வகையில் இடம்பெயர்வோர் (ரோஹிங்கியாக்கள் உள்ளிட்ட) தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். ரோஹிங்கியாக்கள் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் உள்ளன.

சட்டத்திற்கு புறம்பான வகையில் இடம்பெயர்வோரை கைது செய்து, அவர்களது சொந்த நாடுகளுக்கே திரும்ப அனுப்புவதற்கன நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு ஏற்ற வகையில் குற்றச் சட்டங்களை மாற்றி அமைப்பதற்கும், சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு விரைவான நீதி கிடைக்க செய்வதற்கும், ஏற்கனவே உள்ள குற்றச் சட்டங்களை ஆய்வு செய்வதற்கான பணியை அரசு தொடங்கியுள்ளது.

மக்கள் சார்ந்த, உயிர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டப்பூர்வ அமைப்பை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய அரசமைப்பின் படி சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வரும் போதிலும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காகவும், எந்த ஒரு தனி நபரும் சட்டத்தை கையில் எடுப்பதை தடுப்பதற்காகவும், மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. வெறுப்பு குற்றங்கள் மற்றும் கும்பல் தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையு யூனியன் பிரதேசத்தை டவுக்டே புயல் தாக்கியது.

பேரிடர் மேலாண்மை என்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்கிற போதிலும், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றன.

டவுக்டே மற்றும் யாஸ் புயல்களுக்கு பிறகு, கூடுதல் நிதி உதவியாக குஜராத்திற்கு ரூ 1000 கோடியும், ஒடிசாவுக்கு ரூ 500 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ 33 கோடியும், ஜார்கண்டிற்கு ரூ 200 கோடியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, பாதிக்கப்பட்ட மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் 2021 ஏப்ரல் 29 அன்று மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முதல் தவணையாக ரூ 8873.60 கோடி வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739929

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739930

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739933

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739934

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739935


(Release ID: 1740045) Visitor Counter : 193


Read this release in: English , Urdu , Marathi , Punjabi