சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சீர்மரபினர் மற்றும் நாடோடி இன மக்கள், திருநங்கைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள்

Posted On: 27 JUL 2021 3:08PM by PIB Chennai

சீர்மரபினர் மற்றும் நாடோடி இன மக்களின் நல்வாழ்விற்காக இந்தப் பிரிவைச் சேர்ந்த சிறுவர்சிறுமிகளுக்கு டாக்டர் அம்பேத்கர் பத்தாம் வகுப்பிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித் திட்டம், நானாஜி தேஷ்முக் விடுதிகள் கட்டமைப்புத் திட்டம் ஆகியவற்றை அரசு இதுவரை அறிமுகப்படுத்தியிருப்பதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திருமிகு சுஸ்ரீ பிரதிமா பௌமிக் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இன்று குறிப்பிட்டுள்ளார்.

சீர்மரபினர், நாடோடி இனத்தவர் நலன் மற்றும் வளர்ச்சி வாரியம், 21.02.2019 அன்று நிறுவப்பட்டது. சீர்மரபினர் மற்றும் நாடோடி இன மக்களை அடையாளம் காண்பதற்காக நிதி ஆயோக்கால் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சீர்மரபினர் மற்றும் நாடோடி இன மக்களின் பொருளாதார அதிகாரமயமாக்கலுக்கான திட்டம்என்ற சிறப்பு திட்டத்திற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக தரமான பயிற்சியை வழங்குவது, மருத்துவக் காப்பீடு அளிப்பது, சமூக அளவில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வசதிகளை வழங்குவது, வீட்டு கட்டுமானப் பணிகளில் நிதி உதவி அளிப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு திருமிகு சுஸ்ரீ பிரதிமா பௌமிக், கீழ்க்கண்ட தகவலைத் தெரிவித்தார்:

கடந்த 1992-ஆம் ஆண்டு இந்திரா சாவ்னே வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி மொத்த இட ஒதுக்கீடு 50%க்கு மேல் இருக்கக்கூடாது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மீறுவதற்கான திட்ட முன்மொழிவு எதுவும் தற்போது இல்லை.

ஆதரவற்ற திருநங்கைகளுக்கு இருப்பிட வசதி அடங்கிய பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அவர்களுக்கு அளிப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு  வருவதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு நாராயண்ஸ்வாமி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் தெரிவித்தார்.

இதன்படி, திருநங்கைகளுக்கு தங்கும் இல்லங்களை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, 12 மாதிரி இல்லங்களை உருவாக்குவதற்காக சமூக அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த தங்கும் இல்லங்கள் அமைக்கப்படவுள்ளன. திருநங்கைகளுக்கு பாதுகாப்பான உறைவிடங்களை அமைப்பதற்காக உருவாக்கப்படவுள்ள இந்த இல்லங்களில் உணவு, மருத்துவ வசதி, பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அடிப்படை அம்சங்களுடன் திறன் வளர்ச்சி சம்பந்தமான திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும். ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் அமல்படுத்தப்படும் தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் 3384 திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

ஸ்மைல் என்று அழைக்கப்படும் விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு என்ற திட்டத்தின் துணைத் திட்டமாக பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கான விரிவான மத்திய துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், மனநல ஆலோசனை, அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் வளர்த்தல் மற்றும் பொருளாதார தொடர்புகள் ஆகியவற்றை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

சென்னை, தில்லி, பெங்களூரு, ஐதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரிவான மறுவாழ்வை வழங்குவதற்கான மாதிரி திட்டங்களையும் அமைச்சகம் தொடங்கியுள்ளது. மேலும், பிச்சை எடுக்கும் குழந்தைகள், அதில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆரம்பக் கல்வியை நிறைவு செய்வதை உறுதிபடுத்துவது தொடர்பாக பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக்  காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739418

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739445

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739434

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739416

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739413

 (Release ID: 1739486) Visitor Counter : 74


Read this release in: English , Urdu , Telugu