பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
கேந்திர பெட்ரோலிய சேமிப்பு திட்டத்தின் இரண்டாவது பகுதியின் கீழ் 6.5 வியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட கூடுதலாக 2 பெட்ரோலிய சேமிப்புக் கிடங்குகள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி
Posted On:
26 JUL 2021 2:18PM by PIB Chennai
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக இன்று அளித்த பதில்கள் பின்வருமாறு:
இந்திய அரசின் கேந்திர பெட்ரோலிய சேமிப்பு திட்டத்தின் முதல் பகுதியின் கீழ் தனது சிறப்பு நோக்க முகமைகளுடன், இந்திய கேந்திர பெட்ரோலிய சேமிப்பு நிறுவனம் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட பெட்ரோலிய கிடங்குகளை விசாகப்பட்டினம் (1.33 மில்லியன் மெட்ரிக் டன்), மங்களூரு (1.5 மில்லியன் மெட்ரிக் டன்) மற்றும் படூரில் (2.5 மில்லியன் மெட்ரிக் டன்) ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் போது இந்திய அரசின் உத்தரவின்பேரில் இந்த கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படும். பெட்ரோலிய சேமிப்பு திட்டத்தின் இரண்டாவது பகுதியின் கீழ் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட நிலத்தடி கிடங்குகளை சண்டிகோல் (4 மில்லியன் மெட்ரிக் டன்) மற்றும் படூரில் (2.5 மில்லியன் மெட்ரிக் டன்) அரசு-தனியார் கூட்டணியில் கூடுதலாக 2 வர்த்தக மற்றும் கேந்திர வசதிகளை ஏற்படுத்த ஜூலை 2021-இல் அரசு அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கு 2020-21 நிதிநிலை அறிக்கையில் ரூ. 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்திய கேந்திர பெட்ரோலிய சேமிப்பு நிறுவனத்திற்கு இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
33,764 கிலோமீட்டர் தொலைவிற்கு இயற்கை எரிவாயு குழாய் இணைப்பிற்கு அங்கீகாரம்:
நாடு முழுவதும் இயற்கை எரிவாயுவின் இருப்பை அதிகரிக்கவும் தேசிய எரிவாயு தொகுப்பை உருவாக்கும் நோக்கத்துடனும் சுமார் 33,764 கிலோமீட்டர் தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் இணைப்பை அமைப்பதற்கு 31.3.2021 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அங்கீகாரம் அளித்தது. இதன்படி 19,998 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய் பயன்பாட்டிற்கு வந்திருப்பதுடன் 15,369 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மற்றும் வரவிருக்கும் குழாய்கள், தேசிய எரிவாயு தொகுப்பிற்கான அடித்தளமாக அமையும். தூய்மையான எரிசக்தியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
ஆராய்ச்சி திட்டங்களுக்கான அனுமதியை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள்:
எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளின் ஒப்பந்ததாரர்கள்/ நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆராய்ச்சிகள் மற்றும் உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும். பெட்ரோலிய ஆராய்ச்சி உரிமம், பெட்ரோலிய சுரங்க குத்தகை, சுற்றுச்சூழல் அனுமதி, வனத்துறை அனுமதி, வன உயிரின பாதுகாப்பு அனுமதி போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி, விண்வெளி துறையின் அனுமதி உள்ளிட்ட பல்வேறு அனுமதிகள் இதில் அடங்கும். இந்த அனுமதிகள் கிடைப்பதற்கு தாமதமானால், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திட்டங்களின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த கால அளவு பாதிக்கப்படும் என்பதால் உரிய காலத்தில் இதுபோன்ற அனுமதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி அனுமதிகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை செயலாளர் தலைமையின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்களுக்கு சுய சான்றிதழின் அடிப்படையில் அனுமதி அளிக்கும் வகையில் 22 செயல்முறைகள் கண்டறியப்பட்டு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழல், வனம், வன உயிரினம் உள்ளிட்டவை சார்ந்த அனுமதிகளைப் பெறுவதற்காக பரிவேஷ் என்ற இணைய அடிப்படையிலான தளத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் சம்பந்தமான அனுமதிகளை பெறுவதற்கு மின்னணு வாயிலான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சம்மந்தப்பட்ட மாநிலங்களில் நிலுவையில் உள்ள அனுமதிகள் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நடத்தும் கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.
கரும்பு மற்றும் உணவு தானியங்களிலிருந்து பெறப்படும் எத்தனாலின் பயன்பாடு ஊக்குவிப்பு:
இறக்குமதி மீதான சார்பை குறைக்கவும் தூய்மையான எரிவாயு மற்றும் வேளாண்மையை ஊக்குவிக்கவும், எத்தனால் கலந்த பெட்ரோலின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களின் மூலம் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய தர நிர்ணய அமைப்பின் குறிப்புகளின் படி 10% எத்தனால் கலந்த பெட்ரோலை விநியோகிக்குமாறு கடந்த 2009-ஆம் ஆண்டு எண்ணெய் நிறுவனங்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்த அமைப்பின் நெறிமுறைகளுக்கு உட்பட்ட பருத்தி தண்டு, கோதுமைப்புல் மூங்கில் போன்ற பொருட்களிலிருந்து எத்தனால் கொள்முதல் செய்வதற்கு 2014-ஆம் ஆண்டு முதல் அரசு அனுமதி அளித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கரும்பு மற்றும் உணவு தானியங்களை எத்தனாலாக மாற்றுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739019
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=173901
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739015
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739012
-----
(Release ID: 1739165)
Visitor Counter : 278