தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
டிஜிட்டல் ஊடக நடத்தை விதிகள் குறித்த இணையக் கருத்தரங்கை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்தது
Posted On:
20 JUL 2021 6:12PM by PIB Chennai
ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களுக்கான டிஜிட்டல் ஊடக நடத்தை விதிகள் குறைதீர்ப்பு செயல்பாட்டின் மையமாக மக்களை வைத்திருப்பதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு விக்ரம் சஹாய் கூறினார். நடத்தை விதிகள் மற்றும் டிஜிட்டல் ஊடக வெளியீட்டாளர்களுக்கான மூன்று கட்ட குறைதீர்ப்பு செயல்முறையைக் கொண்ட இலகுவான கூட்டு-ஒழுங்குமுறைக் கட்டமைப்பை இந்த விதிகள் நிறுவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக நடத்தை விதிகள் குறித்து லடாக், ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய வடக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள பங்குதாரர்களுக்காக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில் பேசிய திரு சஹாய் இவ்வாறு கூறினார். பல்வேறு பகுதிகளில் உள்ள பங்குதாரர்களுக்காக பத்திரிகை தகவல் அலுவலகத்தின் மண்டல அலகுகளின் மூலம் அமைச்சகம் நடத்தி வரும் இணையக் கருத்தரங்கு வரிசையின் தொடர்ச்சியாக வட மாநிலங்களுக்கான இந்த இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு, மத்திய பகுதிகளுக்கான இணையக் கருத்தரங்குகள் 2020 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்றன.
டிஜிட்டல் ஊடக வெளியீட்டாளர்களுக்கான நடத்தை விதிகள், மூன்று கட்ட குறைதீர்ப்பு செயல்முறை, டிஜிட்டல் ஊடக வெளியீட்டாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கிய திரு சஹாய், 1,800-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களிடம் இருந்து தகவல்களை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பெற்றிருப்பதாகவும், விதிகளின் கீழ் சுயக்கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவுவது தொடர்பான தகவல்களை பல்வேறு அமைப்புகள் மற்றும் வெளியீட்டாளர்களின் சங்கங்கள் அனுப்பி இருப்பதாகவும் கூறினார்.
டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், ஓடிடி தளங்கள் மற்றும் வெகுஜன தொடர்புக் கல்வி நிறுவனங்கள் இந்த இணையக் கருத்தரங்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தகவல் மற்றும் செய்தித்துறை பிரதிநிதிகள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல ஊடகப் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்டோரும் இணையக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
----
(Release ID: 1737381)
Visitor Counter : 196