நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைப்பதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்

Posted On: 20 JUL 2021 4:13PM by PIB Chennai

நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி மற்றும் திரு அஷ்வினி குமார் சௌபே, கீழ்கண்ட தகவல்களை அளித்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது அரசு எடுத்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் 51 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

சமையல் எண்ணெய்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக, கச்சா பாமாயிலின் மீதான வரியை 5 சதவீதம் குறைத்து அரசு அறிவித்தது. வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறையால் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் பனை) எனும் மத்திய அரசு நிதியுதவி பெற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம், 2020, அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனல், அதன் செயல்படுத்தலை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

நுகர்வோர் நலன் (மின்-வணிகம்) விதிகளில் திருத்தம், 2020, மின்-வர்த்தகத்தில் நியாயமில்லா வணிக நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் முன்மொழியப்பட்டது. இது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசு வரவேற்றுள்ளது.

வேளாண் பொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உள்கட்டமைப்புக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை சாராத பொருட்கள் தகுதி பெறும். 2017-18-ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ 196.15 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2020-21-ம் ஆண்டில் ரூ 207.40 கோடி செலவிடப்பட்டுள்ளது.

குளிர் சங்கிலி திட்டத்தின் கிழ், தமிழகத்தில் 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 10 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 7 திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் திட்டங்களின் மதிப்பு ரூ 523.97 கோடியாகவும், ஒப்புதல் அளிக்கப்பட்ட மானியம் ரூ 117.01 கோடியாகவும், வழங்கப்பட்டுள்ள மானியம் ரூ 70.80 கோடியாகவும், முதலீட்டின் மதிப்பீடு ரூ 406.96 கோடியாகவும், உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 10,200 ஆகவும், பலன் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 162,384 கோடியாகவும் உள்ளது.

மொத்தமுள்ள 23.63 கோடி ரேஷன் அட்டைகளில் 21.92 கோடி (92.8 சதவீதம்) தேசிய அளவில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்ட சீர்திருத்தத்தின் கீழ் ரூ 37600 கோடி கூடுதல் கடன் வாங்க 2020-21-ம் ஆண்டில் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ 8,813.00 கோடி கடன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ 37,600.00 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைகளை ஆதாருடன் இணைப்பதற்கான பணிகள் ஜார்கண்ட், மிசோராம், லடாக், நாகாலாந்து, மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பல்வேறு காரணங்களினால் மெதுவாக நடைபெற்று வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737193

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737195

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737198

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737199

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737200

                                                                                         ------



(Release ID: 1737324) Visitor Counter : 222


Read this release in: English , Urdu , Bengali