உள்துறை அமைச்சகம்

மாநில பேரிடர் நிவாரண நிதி, கொவிட் மேலாண்மை, சைபர் குற்றங்கள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்களின் பதில்

Posted On: 20 JUL 2021 3:08PM by PIB Chennai

மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு:

தேசிய பேரிடர் நிவாரண நிதியின் மேலாண்மை:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 கீழ் நிதி ஆணையங்களின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. குறிப்பிடப்பட்டுள்ள 12 பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. எனினும் நாட்டில் கொவிட்-19 தொற்றைக் கருத்தில் கொண்டும், அதனை பெருந்தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதாலும், தனிமைப்படுத்தல், அதற்கான நடவடிக்கைகள், மாதிரி சேகரிப்பு, அத்தியாவசிய உபகரணங்களின் கொள்முதல் போன்ற பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து குறைந்த தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக அவர்களுக்கு நிவாரண முகாம், உணவு போன்றவற்றை அளிப்பதற்காகவும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும் பிராணவாயு உற்பத்தி மற்றும் மருத்துவமனைகளில் சேமிப்பு ஆலைகளை அமைக்க அவசரகால ஊர்திகளின் சேவையை வலுப்படுத்தவும் மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்திக்கொள்ள இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 2019-20 ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் வருடாந்திர ஒதுக்கீட்டில் 35% மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அளவு, 2020-21 ஆம் நிதி ஆண்டில் 50%ஆக உயர்த்தப்பட்டது. மேலும் தொற்றின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கப்பட்டதைக் கருதி, கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2021-22-ஆம் நிதியாண்டில் 50% பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பங்காக ரூ. 8873.60 கோடி கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் விடுவிக்கப்பட்டது.

பொதுமுடக்க நெறிமுறைகளில் தளர்வு:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் பெருந்தொற்றினால் ஏற்பட்ட அயர்ச்சி, சரியான நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றாதது, கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபட்ட வகைகளின் வளர்ச்சி இவற்றின் காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டது.

நாட்டில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகப் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆணையில், மாநிலத்தில் உள்ள நிலைமையைப் பொறுத்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியிட்ட அறிவுரைகளை உடனடியாக அமலுக்குக் கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 27 தேதியிட்ட கடிதத்தில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. இதையடுத்து 28.6.2021 தேதியில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பை வழிகாட்டுதலாகப் பயன்படுத்தி படிப்படியான தொடர்புகளை அறிவிக்குமாறு உள்துறை அமைச்சகம் 29.6.2021 அன்று கேட்டுக்கொண்டது. மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொவிட் சரியான நடத்தை விதிமுறை ஆகிய ஐந்து உத்திகளை பின்பற்றுமாறும் 19.6.2021, 29.6.2021 மற்றும் 14.7.2021 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட கடிதங்களில் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. தங்களது மருத்துவ அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மத்திய அரசு அளித்து வருகிறது. இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பின் கீழ் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 15,000 கோடி வழங்கப்பட்டது. இதையடுத்து  இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு: பகுதி II இன் கீழ் ரூ. 23,123 கோடியை 2021-22 ஆம் நிதியாண்டில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

காவல் துறையை நவீனமாக்குவதற்கு நிதி ஒதுக்கீடு:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் காவல்துறை மற்றும் பொது ஆணை ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் எழுகின்றன. எனினும் மத்திய அரசின் திட்டமான காவல்துறையை நவீனமாக்க மாநிலங்களுக்கு ஆதரவின் கீழ் மாநில அரசுகளுக்கு இந்திய அரசு பல்வேறு ஆதரவுகளை அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மேம்பட்ட ஆயுதங்கள், உளவுப் பிரிவினருக்கானக் கண்காணிப்பு உபகரணங்கள், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், பாதுகாப்புப் பயிற்சி, தடயவியல் குற்றங்களுக்கான நவீன கருவிகள் போன்றவற்றை கொள்முதல் செய்ய மத்திய அரசின் உதவி வழங்கப்படுகிறது. தங்களது கேந்திர முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு இணங்க முன்மொழிவுகளை அதிகரிக்கும் வாய்ப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில காவல் துறையில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. உடலில் அணியும் கேமராக்கள் மற்றும் ட்ரோன்களை காவல்துறையினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அளிக்கப்படும் நிதியை அதிகரிக்குமாறு உத்தராகண்ட், பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. எனினும் தற்போது பெரும்பாலான மாநில அரசுகளிடம் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிதி கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அளிக்கப்படும் நிதியை உரிய காலத்தில் முறையாக பயன்படுத்தும் மாநிலங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவற்றிற்கு கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்றின் தடுப்பு நடவடிக்கைகள்:

2019-20-ஆம் நிதி ஆண்டில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் கொவிட்- 19 மேலாண்மைக்காக ரூ.1113.21 கோடி மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விடுவிக்கப்பட்டது. இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பின் கீழ் 2020-21ஆம் நிதி ஆண்டில் ரூ. 8257.88 கோடி கொவிட்-19 மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சாதிவாரியான கணக்கெடுப்பு:

கணக்கெடுப்பு அட்டவணை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பை மேற்கொள்வது பற்றிய அரசின் கருத்து 2019 மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 பாதிப்பால் கணக்கெடுக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஆணை, 1950 (பட்டியல் இனங்கள்) மற்றும் அரசியல் அமைப்பு ஆணை, 1950 (பட்டியல் பழங்குடியினர்) -இன்படி பட்டியல் இனங்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள சாதிகளும் பழங்குடிகளும் கணக்கெடுப்பில் அவ்வப்போது திருத்தி அமைக்கப்படுகின்றன. அரசியலமைப்பின்படி மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் பட்டியல் இனங்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினங்களுக்கு அவர்களது மக்கள் தொகையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பட்டியலின, பட்டியல் பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளிலும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைத்திலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய்குமார் மிஸ்ரா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு:

சைபர் குற்றங்களின் அதிகரிப்பு:

தங்களது சட்ட அமலாக்க முகமைகள் வாயிலாக சைபர் உள்ளிட்ட குற்றங்களின் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் விசாரணையை மேற்கொள்வது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முக்கிய பொறுப்பாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டபூர்வமான வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநிலங்களின் திறன் கட்டமைப்பிற்காக பல்வேறு திட்டங்களின் கீழ் ஆலோசனைகள் மற்றும் நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களின் தடுப்புத் திட்டத்தின் கீழ் சைபர் தடயவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்கள், இளநிலை சைபர் ஆலோசகர்களுக்கான பயிற்சி மற்றும் அவர்களை பணியமர்த்துவதில் உள்துறை அமைச்சகம் நிதி உதவியை அளிக்கிறது. சைபர் தடயவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்கள் 18 மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளன. சைபர் குற்றங்கள் சம்பந்தமான புகார்களை வழங்குவதற்காக www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் குற்றப்பதிவு தளத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இணையதளம் வாயிலாக சைபர் குற்றங்களை பதிவு செய்வதில் உதவுவதற்கு 155260 என்ற இலவச தொலைப்பேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737161

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737159

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737157

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737158

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737156

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737160

                                                                                             -----



(Release ID: 1737283) Visitor Counter : 1126


Read this release in: English , Urdu , Marathi , Punjabi